மீன்கள் பறிமுதலைக் கைவிடக் கோரி நாகையில் மீனவர்கள் போராட்டம்

தடை செய்யப்பட்ட வலைகள் பயன்பாட்டையொட்டி, மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கண்டித்து நாகை நம்பியார் நகர் மீனவர்கள், மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்த முயன்றனர்.
மீன்கள் பறிமுதலைக் கைவிடக் கோரி நாகையில் மீனவர்கள் போராட்டம்
Published on
Updated on
2 min read

நாகப்பட்டினம்: தடை செய்யப்பட்ட வலைகள் பயன்பாட்டையொட்டி, மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கண்டித்து நாகை நம்பியார் நகர் மீனவர்கள், மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று (சனிக்கிழமை) போராட்டம் நடத்த முயன்றனர். இதை போலீஸார் அனுமதி மறுத்ததால், மீனவர்களுக்கும் போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு சில மீனவக் கிராம மீனவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில், நாகை மாவட்டத்தில் மீன்வளத் துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து தீவிர சோதனையைக் கடந்த சில நாள்களாக மேற்கொண்டு வருகின்றனர். 

நாகை மற்றும் சில பகுதிகளிலிருந்து மீன் ஏற்றிச் செல்லும் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி சோதனையிட்டு, தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை மீன்வளத் துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நடவடிக்கையைக் கண்டித்து நாகை மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவது எனவும், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் நாகை நம்பியார் நகர் மீனவப் பஞ்சாயத்தில் வெள்ளிக்கிழமை இரவு தீர்மானிக்கப்பட்டது.

இதையொட்டி, நாகை வருவாய்க் கோட்டாட்சியர் பழனிகுமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன், வட்டாட்சியர் பிரான்சிஸ் ஆகியோர் சனிக்கிழமை காலை 7 மணி அளவிலேயே நம்பியார் நகர் மீனவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததையடுத்து, ஏற்கெனவே திட்டமிட்டப்படி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த, நம்பியார் நகரில் இருந்து மீனவர்கள், மீனவப் பெண்கள் திரளானோர் ஊர்வலமாகப் புறப்பட்டனர். 

இதற்கு போலீஸார் அனுமதி மறுத்து, ஏழைப்பிள்ளையார் கோயில் அருகே தடுப்புகளை அமைத்து தடை ஏற்படுத்தினர்.  தடுப்புகளை தள்ளிவிட்டு மாவட்ட ஆட்சியரகம் நோக்கிச் செல்ல மீனவர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர்.  இதனால், போலீஸாருக்கும், மீனவர்களுக்கும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, மீனவர்கள் சாலையில் அமர்ந்து, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதன் காரணமாக, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் கிழக்குக் கடற்கரை சாலை வழியே இயக்கப்பட்டன.

பின்னர், மீனவர்கள் தங்கள் கோரிக்கைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தக் கூடாது எனவும், மீனவப் பிரதிநிதிகள் மட்டும் மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளச் செல்லுமாறும் நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரெத்தினம் அறிவுறுத்தினார். இதன்பேரில், மீனவர்கள், மீனவப் பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டு சாலையிலிருந்து கலைந்து சென்றனர். 

அங்கு, மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் தலைமையில், மத்திய மண்டல காவல் துறை தலைவர் ஜெயராம், தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவர் ரூபேஸ்குமார் மீனா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரெத்தினம், மீன்வளத் துறை இணை இயக்குநர் அமல்சேவியர் ஆகியோர் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com