உப்பாறு அணைக்கு பி.ஏ.பி பாசன நீரை திறந்து விடக் கோரி தாராபுரத்தில் சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட உப்பாறு அணைக்கு பி.ஏ.பி பாசன நீரை திறந்து விடக் கோரி விவசாயிகள் தாராபுரத்தில் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

திருப்பூர்: காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட உப்பாறு அணைக்கு பி.ஏ.பி பாசன நீரை திறந்து விடக் கோரி விவசாயிகள் தாராபுரத்தில் சார் ஆட்சியர் அலுவலகத்தை இன்று (புதன்கிழமை) முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

உப்பாறு அணை கட்டித் தந்த காமராஜரின் நினைவை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு உப்பாறு பாசன விவசாயிகள் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். 

இந்த மனுவில் கூறியிருப்பது: 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள உப்பாறு அணை 1965ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1968ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அன்றைய அமராவதி வடிநில கோட்ட நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் உப்பாறு அணையைச் சுற்றியுள்ள ஏழு ஊராட்சிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 60 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பயன்பெறும் வகையில் பாசன நீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதன் பிறகு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் அணையின் நீர் நிர்வாகம் ஒதுக்கப்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உப்பாறு அணைக்கு முழுமையான தண்ணீர் கிடைப்பதில்லை. அரசாணை எண் 506/1.06.1994ன் படி அணைக்கு தண்ணீர் வழங்குவது முறையாக நடைபெறவில்லை.

இதனால் மூன்று போக பாசனம் விளைவிக்கப்பட்டு வந்த ஒரு பகுதி, தற்போது ஒரு போக பாசனத்திற்கு கூட வழியின்றி, பிஏபி அணையின் நீர் இருப்பைப் பொறுத்து உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் இருந்த சுமார் இரண்டரை லட்சம் தென்னை மரங்கள் காய்ந்து கருகியதுடன் இப்பகுதி விவசாய நிலங்கள் சாகுபடிக்கு பயனற்றதாகி வருகிறது. 

மேலும் ஏராளமான விவசாயிகள் உப்பாறு அணை கிராமங்களை காலி செய்து விட்டு திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட நகரப்பகுதிகளில் பிழைப்புத் தேடி சென்றனர். தற்போது கரோணா தொற்று நகரப்பகுதிகளில் அதிகரித்து பொது முடக்கம் ஏற்பட்டதால் விவசாயிகள் தங்களது இருப்பிட கிராமங்களுக்கு திரும்பி வந்துள்ளனர். விவசாயம் செய்யவும் வழியின்றி, பாசன நீர் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பிஏபி அணையிலிருந்து மண்டல பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பாக உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com