

நாமக்கல்: நாமக்கல் அருகே மணல் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி வளைவில் திரும்புகையில் கவிழ்ந்ததில் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அடியில் சிக்கி உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள மணல் குவாரியிலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் லாரிகளில் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த நிலையில் நாமக்கல்- துறையூர் சாலையில் எருமப்பட்டி நோக்கி டிப்பர் மணல் லாரி ஒன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. தூசூர் ஏரிக்கரை அருகே வளைவு ஒன்றில் லாரி திரும்பியபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த என். புதுப்பட்டி ராஜ வீதியைச் சேர்ந்த சுப்பிரமணி (60), கதிர்வேல் (65) ஆகியோர் லாரியின் அடியில் சிக்கிக் கொண்டனர். இவர்கள் மீது மணல் முழுவதும் சரிந்ததால் மூச்சு திணறியும், உடல் நசுங்கியும் பலியாகினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த எருமப்பட்டி காவல்துறையினர் இருவரது சடலத்தையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் நாமக்கல் -துறையூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.