
திருப்பூர்: தொழிலாளர் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஏஐடியூசி அலுவலகத்தில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்டத் தலைவர் சி.பழனிசாமி தலைமை வகித்தார்.
இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்:
மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர்கள் விரோதப் போக்கைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களும் ஜூலை மாதம் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. கரோனா நோய்த் தொற்றை அவசர நிலையாக எதிர்கொள்வதற்குப் பதிலாக மத்திய அரசு தவறாகக் கையாண்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், கார்பரெட் நிறுவனங்கள், பெரிய முதலாளிகளின் நலன்களைக் காப்பதில் மத்திய, மாநில அரசுகள் அக்கறையுடன் உள்ளன.
ஆகவே, தொழிலாளர்களின் ஊதியத்தையும், எதிர்கால பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் வரும் ஜூலை 3ஆம் தேதி 300க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக்கூட்டத்தில், ஏஐடியூசி சார்பில் என்.சேகர், ஏ.ஜெகநாதன், சிஐடியூசி சார்பில் கே. உன்னிகிருஷ்ணன், கே. ரங்கராஜ், எல்பிஎஃப் சார்பில் ஆர். ரங்கசாமி, டி. சிதம்பரசாமி, ஐஎன்டியூசி சார்பில் சி. சிவசாமி, ஏ.பெருமாள், எச்எம்எஸ் சார்பில் ஆர். முத்துசாமி, குணசீலன், எம்எல்எஃப் சார்பில் மு. சம்பத், வி. பாண்டியராஜன் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.