Enable Javscript for better performance
மனிதர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் ஓங்கல்கள- Dinamani

சுடச்சுட

  

  மனிதர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் ஓங்கல்கள்

  By மோகன ரூபன்  |   Published on : 23rd May 2020 03:16 PM  |   அ+அ அ-   |    |  

  dolphin

   

  கடல்வாழ் பாலூட்டிகளில் ஒன்றான ஓங்கல் எனப்படும் டால்பின் ஒரு விந்தையான உயிரினம். மனிதர்கள் அளவுக்கு அறிவுள்ள விலங்கான ஓங்கல், மனிதர்களோடு மிக நெருங்கிப் பழகக் கூடிய விலங்கு. மனிதர்களின் உணர்வுகளைக்கூட ஓங்கலால் புரிந்து கொள்ள முடியும். கடலில் மூழ்கித் தத்தளித்த மனிதர்களை ஓங்கல்கள் காப்பாற்றி கரைசேர்த்த சில நிகழ்வுகள் உள்ளன.

  கடல் கடவுள் நெப்டியுனால் சபிக்கப்பட்ட சில கப்பல் மாலுமிகள்தான் டால்பின்களாக மாறினார்கள் என்று கிரேக்க நாட்டுப் பழங்கதைகள் கூறுகின்றன. கிரேக்க (கிரீஸ்) நாட்டில் டால்பின்களைக் கொன்றால் அது மிகப்பெரிய குற்றம்.

  ஒருமுறை அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநில கடல்அருங்காட்சியகத்துக்கு ஒரு பெண்மணி போயிருந்தார். அவர் ஓங்கல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, பெண் ஓங்கல் ஒன்று அதன் வாயால் சிறிய கூழாங்கல் ஒன்றை நீருக்கு அடியில் இருந்து பொறுக்கியெடுத்து, அந்த பெண்ணின் வயிற்றின் மீது சரியாக குறிபார்த்து எறிந்தது. அது மிகச்சிறிய கல். எனவே அந்தப் பெண்மணிக்கு வலி எதுவும் ஏற்படவில்லை.

  இப்போது இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு சிறிய கல்லை எடுத்து அந்தப் பெண்ணின் வயிற்றைக் குறிபார்த்து ஓங்கல் மென்மையாக எறிந்தது. மூன்றாவது முறையும் இதேப்போல நடந்தது. அந்த கடல்அருங்காட்சியக ஊழியர்களுக்கு கூட ஓங்கல் ஏன் அப்படி செய்கிறது என்பது புரியவில்லை. இதுவரை அது அப்படி நடந்து கொண்டதில்லை. இது என்ன புதுப்பழக்கம் என்று அவர்கள் திகைத்துப் போனார்கள். 

  ஓங்கல் அறியும் உயர் கடலின் ஆழம் - பெலோரஸ் ஜேக்கின் கதை

  ஆனால் அந்தப் பெண்மணி மட்டும் ஓங்கல் ஏன் அப்படி செய்தது என்பதை புரிந்து கொண்டார். தான், சற்றுமுன் மருத்துவமனைக்குப் போயிருந்ததாகவும், மருத்துவர் தன்னைப் பரிசோதித்துவிட்டு கர்ப்பமாக இருப்பதாகக் கூறியதாகவும் அந்தப் பெண்மணி கூறினார். அந்தப் பெண்மணியின் வயிற்றில் புதிதாக உருவாகி இருந்த கருவை ஓங்கல் அறிந்து அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளத்தான் அந்தப் பெண்மணியின் வயிற்றின் மீது சிறிய கல்லை வீசி விளையாடியிருக்கிறது. அந்த அளவுக்கு ஓங்கல்கள் எனப்படும் டால்பின்கள் அதீத அறிவாற்றலும், விசித்திரமான சக்தியும் உள்ளவை.

  சுறாக்களால் 100 மீட்டர் தொலைவில் உள்ள உயிர் ஒன்றின் இதயத் துடிப்பைக்கூட அறிந்து கொள்ள முடியும் என்பார்கள். இதே திறமை ஓங்கல்களுக்கும் உண்டு. ஓங்கல்களால் ஒரு பெண்ணின் வயிற்றில் உள்ள கருவை ஸ்கேன் செய்து விட முடியும். கர்ப்பிணி பெண் ஒருவரை கடலில் இடுப்பளவு ஆழத்தில் நிறுத்திவைத்தால் ஓங்கல்கள் வந்து அவரை சூழ்ந்து கொள்ளும் என்றுகூட ஒரு நம்பிக்கை உள்ளது.

  இதுபோக, ஓங்கல்களிடம் இன்னும் பல்வேறு வகையான திறமைகள் உள்ளன. ஓங்கல்களால் பேசவும், பாடவும் முடியும். மிகமிகத் தொலைவில் இருந்து தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்.

  இது தவிர கடல்கொண்ட தென்னாடான லெமூரியா கண்டம், கடலில் மூழ்கி மறைந்த அட்லாண்டிஸ் கண்டம் போன்ற பழங்கால கண்டங்களைப் பற்றி ஓங்கல்களுக்குத் தெரியும் என்பார்கள். மூதாதையர்கள் சொன்ன கதைகளை மனிதர்கள் வழி வழியாக தங்கள் சந்ததிகளுக்குக் கடத்துவது போல, ஓங்கல்களும் தங்கள் பரம்பரை அறிவை, வரலாற்றை, வழிவழியாக தங்கள் சந்ததிகளுக்கு கடத்துவதாக அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். கடலில் மூழ்கிய கப்பல்களில் உள்ள புதையல்களைப் பற்றிகூட ஓங்கல்களுக்குத் தெரியும் என்பார்கள். (ஓங்கலுக்கு உடனே Facebook Friend request கொடுத்து விடாதீர்கள்)

  அமெரிக்க செவ்விந்தியர்கள், ஓங்கலை ‘வாழ்க்கையின் மூச்சு’ என்று வர்ணிப்பார்கள். ‘உடல் என்னும் யதார்த்தத்தின் வரம்புகளை, பரிமாணங்களை உடைத்தெறியும் ஆற்றல் கொண்டவை ஓங்கல்கள்’ என்றும் அவர்கள் கூறுவார்கள்.

  தமிழகத்தின் தென்கடல் பரதவர்களிடம் ஒரு பழமொழி உண்டு. ‘ஓங்கல் அறியும் உயர்கடலின் ஆழம்’ என்ற பழமொழி அது. ஓங்கல்களுக்கு இவ்வளவு அறிவும் திறமையும் இருக்கும்போது, ஓங்கல் ஒன்று கப்பல்களுக்கு வழிகாட்டுவது அப்படியொன்றும் அதற்கு பெரிய வேலை இல்லை. சும்மா ஜூஜூப்பி வேலை.

  TAGS
  dolphins
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai