கரோனா வைரஸ்: இந்திய மருத்துவமனைகளில் 11 பேர்

கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்திய மருத்துவமனைகளில் இதுவரை  11 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ்: இந்திய மருத்துவமனைகளில் 11 பேர்

கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்திய மருத்துவமனைகளில் இதுவரை  11 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் காரணமாக சீனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மலேசியாவிலும் பிரான்ஸிலும் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படும் இந்த வைரஸால் உலகம் முழுவதும் 1000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் பாதிப்பிலிருந்து தப்பவும் மருத்துவத் துறையினர் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

சீனாவில் வூஹான் நகர் இருக்கும் ஹூபே மாகாணத்தில் மட்டும் வெள்ளிக்கிழமை வரை வைரஸ் பாதிக்கப்பட்ட 180 பேர் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 752 ஆக அதிகரித்திருப்பதாகவும் ஹூபே நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது. 

சீனாவில் நேரிட்ட 41 உயிரிழப்புகளில் இந்த வைரஸ் முதன்முதலில் அறியப்பட்ட வூஹான் நகரத்துக்கு வெளியே 3 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.

ஏற்கெனவே, 800 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 26 பேர் உயிரிழந்ததாகவும் சீனா அறிவித்திருந்தது. தற்போது மேலும் 15 பேர் உயிரிழந்ததாக அறிவித்துள்ளனர்.

இந்த வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவில் 13 நகரங்களில் மக்கள் போக்குவரத்து தடுக்கப்பட்டு முழுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

மலேசியாவில் மூன்று பேருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மலேசிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் முதல் பாதிப்பு இது.

ஐரோப்பாவில் முதன் முதலாக, பிரான்ஸில் இருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நல்வாழ்வு அமைச்சகம் அறிவித்திருக்கிறது. மேலும் பாதிப்புகள் தெரிய வரலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இவர்களின் உறவினர்களில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் மட்டும் 41 பேரின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தாய்லாந்து, வியத்நாம், சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, தாய்வான், நேபாளம், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் பாதிப்புகள் அறியப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தில் 5, சிங்கப்பூர், தாய்வானில் தலா 3 பேர், ஜப்பான், வியத்நாம், தென் கொரியா, அமெரிக்காவில் தலா இருவர், நேபாளத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா

இதனிடையே, இந்தியாவிலும் வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் மருத்துவமனைகளில் இதுவரை 11 பேர்  தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

மும்பையில் 3 பேர், கேரளத்தில் 7 பேர், ஹைதராபாத்தில் ஒருவர் கண்காணிப்பில் இருக்கின்றனர். இவர்களில் சீனாவிலிருந்து திரும்பிய 4 பேருக்கு பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவுக்கு வரும் பயணிகள் சோதனைக்குப் பிறகே இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 96 விமானங்களில் வந்த 20 ஆயிரத்து 844 பேர் சோதிக்கப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com