தாயை இழந்த குட்டிகளைத் தத்தெடுக்கும் திமிங்கிலங்கள்!

தாயை இழந்த குழந்தைகள் பார்த்துக் கொள்ள யாருமின்றிக் கஷ்டப்படும் மனிதர்கள் வாழும் உலகில் தாயை இழந்த குட்டிகளைத் திமிங்கிலங்கள் தத்தெடுத்துக் கொள்கின்றன என்றால் நம்ப முடிகிறதா?
தாயை இழந்த குட்டிகளைத் தத்தெடுக்கும் திமிங்கிலங்கள்!

தாய் வயிற்றிலிருந்து பிறக்கும் போது நாம் தலைகீழாகப் பிறந்தோம்.   மூச்செடுக்க வசதியாக நமது தலை முதலில் வெளிவந்தது. ஆனால் திமிங்கிலக் குட்டிகள் கடலுக்கு அடியில் பிறப்பதால், முதலில் வால்தான் ‘தலை‘யை நீட்டும். பிறகுதான் முழு உடலும் வெளிவரும். திமிங்கிலக்குட்டியின் தலை முதலில் வெளிவந்தால் அதன் மூச்சுத் துளைக்குள் நீர் புகுந்து அது இறந்து விட வாய்ப்புள்ளது.

திமிங்கிலக் குட்டி பிறந்தவுடன் செய்ய வேண்டிய முதல் அரும்பணி மூச்செடுப்பதுதான். திமிங்கிலக் குட்டியை கடலின் மேற்பரப்புக்கு கொண்டு வந்து அதை மூச்செடுக்க வைக்கும் பணியை, தாய்த் திமிங்கிலமோ அல்லது பேறு காலத்தின் போது அதன் உடனிருந்து உதவிய அத்தை அல்லது பெரியம்மா திமிங்கிலமோ செய்யும். இவற்றின் உதவியுடன் திமிங்கிலக்குட்டி கடல்மேல் வந்து உயிர்க்காற்றை முதன்முறையாக இழுத்து மூச்சுவிடும்.

அதன்பிறகு பாலருந்தும் பணி. தாய்த் திமிங்கிலம் அதன் பால் சுரப்பிகளில் உள்ள தசைகளை இயக்கி, குட்டியின் வாயை தனது பால்காம்பில் பொருந்த வைத்து, பாலைப்பொழியும். ஒரு நாளைக்கு 40 முறை திமிங்கிலக் குட்டி பாலருந்தும்.

திமிங்கிலப் பால் மிகச்செழுமையானது. 50 விழுக்காடு வரை கொழுப்புச்சத்து நிறைந்தது. (பசும்பாலில் வெறும் 4 விழுக்காடு கொழுப்புதான்) திமிங்கில பாலை சுவைத்துப் பார்த்த சில மனிதர்கள் அது, மெக்னீசியம், மீன் சதை, கல்லீரல், ஆமணக்கெண்ணெய் கலந்த கலவை போல இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். திமிங்கிலப் பால் நமக்கு ஒருவேளை உவ்வே என்று குமட்டலாம். ஆனால், திமிங்கிலக் குட்டிக்கு அது சுவை நிறைந்த பேரமுதம்.

இந்த செறிவான கொழுப்புப் பால் மூலம் திமிங்கிலக் குட்டி ஒரே நாளில் 200 பவுண்ட் வரை, அதாவது ஒரே நாளில் 4 சிறுவர்களுக்கு இணையாக வளரும். நாள் ஒன்றுக்கு திமிங்கிலக் குட்டி 130 கேலன் பால் குடிக்கும். (ஒரு கேலன் என்பது 3.78 லிட்டர்)

திமிங்கிலக் குட்டிகள் பிறந்த சில நாள்களில் ‘பேச’ கற்றுக் கொள்கின்றன. திமிங்கிலங்களின் மொழியில், அம்மா, உணவு, ஆபத்து, விளையாட்டு என்ற ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு விதமான ஓசை இருக்கிறது. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது போல ‘பேசத்‘ தெரிந்த திமிங்கிலக் குட்டிதான் பிழைக்கும் என்பதால் திமிங்கிலக் குட்டிகள் ஒவ்வொன்றும் தாயிடம் இருந்து ‘பேசக்‘ கற்றுக்கொள்கின்றன..

திமிங்கிலத்துக்கு நம்மைப் போல குரல்வளை இல்லை. எனவே அதிர்வுகள் மூலம் அவை ‘பேசுகின்றன’. சிறப்பு சீழ்க்கை அதிர்வொலிகள், சுண்டெலி போன்ற கிறீச் சத்தம், கதவைத் திறக்கும் ஓசை, கீச்சொலிகள், பலவித முக்கல், முனகல்கள் போன்ற அதிர்வொலிகளை திமிங்கிலத் தாய் கற்றுக் கொடுக்கிறது. குட்டி கற்றுக்கொள்கிறது. மனிதக் காதுகளுக்கு கேட்காத இந்த கேளா ஒலியை எல்லா திமிங்கிலங்களாலும் உணர முடியும். புரிந்து கொள்ளவும் முடியும்.

திமிங்கிலங்கள் ‘எக்கோலொக்கேசன்‘ (Echolocation) ஒலியலைகளின் மூலம் பேச மட்டுமல்ல, ‘பார்க்கவும்‘ செய்கின்றன. திமிங்கிலம் அதன் மூச்சுத்துளை வழியாக, ஒலியலையை வெளியிடும். இந்த ஒலியலை எதிரே வரும் பொருள்களின்மீது மோதி எதிரொலி போல மீண்டும் திமிங்கிலத்திடம் திரும்புகின்றன. இதன்மூலம் எதிரே வருவது படகா, மீன்கூட்டமா, பாறையா, மணல்கரையா என்பதை திமிங்கிலம் உணர்ந்து கொள்கிறது. எதிரே உள்ள உருவத்தின் நீளம் அகலம் உயரத்தை இந்த ஒலியலை மூலம் திமிங்கிலம் தனது மூளையில் ஒரு படமாக உணர்கிறது. எதிரே வரும் பொருள் அருகில் மிக நெருங்க நெருங்க திமிங்கிலத்தின் ஒலியலை செல்லும் வேகமும், திரும்பும் வேகமும் அதிகரிக்கும். பல்லுள்ள ஸ்பெர்ம் போன்ற திமிங்கிலங்களால் இந்த ஒலியலையை ஆயுதம் போல பயன்படுத்தி எதிரே வரும் எதிரியைத் தாக்கி, சற்று திக்குமுக்காட வைக்கவும் முடியும்.

கடலில் ஒரு மைல் தொலைவில் வரும் மீன்கூட்டத்தை 2 நொடிகளில் திமிங்கிலத்தால் ‘பார்க்க‘ முடியும். ஒலியலைகள் போக ஒரு நொடி, வர ஒரு நொடி, அவ்வளவுதான். திமிங்கிலத்தின் இந்த எக்கோலொக்கேசன் பழுதாகி, செயல்படாத போதுதான் திமிங்கிலங்கள் கடலோரம் ஒதுங்கி தரை தட்டுகின்றன.

கடலில் தாயைப் பிரிந்த திமிங்கிலக் குட்டி ஒன்று இந்த எக்கோலொக்கேசன் மூலம் உதவி கேட்டு அழுகுரல் எழுப்ப, ஒரே வேளையில் 25 ஸ்பெர்ம் பெண் திமிங்கிலங்கள் அதைக் காக்க ஓடிவந்ததை ஒருவர் பதிவு செய்திருக்கிறார்.

திமிங்கிலங்களின் இந்த எக்கோலொக்கேசனுக்கு இன்னொரு விதமான பயன்பாடும் இருக்கிறது. ஒரு திமிங்கில குட்டியின் வயிற்றில் காற்றுக் குமிழ் இருப்பதைக் கூட தாய்த்திமிங்கிலத்தால் இந்த எக்கோலொக்கேசன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். தட்ட வேண்டிய இடத்தில் குட்டியைத் தட்டி அந்த காற்றுக் குமிழை ஏப்பமாக தாய்த் திமிங்கிலம் வெளியேறச் செய்யும்.

.பெரிய திமிங்கிலங்கள் குட்டிகளுடன் அவ்வப்போது விளையாடுவதும் உண்டு. சாம்பல் திமிங்கிலங்கள் குட்டியை தனக்கு மேல்பக்கம் நீந்த வைத்து ஊதுதுளையால் திடீரென காற்றுவளையங்களை ஏற்படுத்தி குட்டியை சுழல வைத்து வேடிக்கை காட்டும். குட்டியை தன் முகத்தால் தட்டி தட்டி தூக்கி எறிந்து விளையாடும் பழக்கமும் சாம்பல் திமிங்கிலங்களுக்கு உண்டு. ஸ்பெர்ம் திமிங்கிலம் பலம் வாய்ந்த தாடைகளால் குட்டியை முத்தமிடும். பக்கத் தூவிகளால் குட்டியை கட்டியணைத்துக் கொள்ளும் பழக்கமும் திமிங்கிலங்களுக்கு உள்ளது.

திமிங்கிலக் குட்டிகளும் மனிதக் குழந்தைகளைப் போலத்தான். சிலவேளைகளில் தாய் சொல்லைக் கேட்காமல் அவை குறும்புகளில் ஈடுபடும். அப்போது தாய்த் திமிங்கிலம் சிறு தண்டனைகளைத் தரத் தவறாது. திமிங்கிலத்தில் சிறிய வகையான ஓங்கல், அதன் குட்டியை சிறிது நேரம் தண்ணீருக்குள் அமிழ்த்திப் பிடித்து, மூச்செடுக்க விடாமல் செய்து தண்டிக்கும்.

திமிங்கிலக் குட்டி உணவு, பாதுகாப்பு, கல்விக்காக எப்போதும் அதன் தாயை அண்டியே வாழும். தாயின் அடிவயிற்றையோ வாலை ஒட்டியோ குட்டி நீந்திவரும். தாய்த் திமிங்கிலம் இரைதேடச் சென்றால் அதன் இடத்தில் இன்னொரு பெண் திமிங்கிலம் இருந்து குட்டியை சொந்த பிள்ளை போல பார்த்துக் கொள்ளும். தாய்த் திமிங்கிலம் இறந்து போனால், குட்டியை மற்றொரு பெண் திமிங்கிலம் தத்தெடுத்து வளர்க்கும்.

- எழுத்தாளர் டெல்லா ரௌலண்ட் எழுதிய புத்தகத்திலிருந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com