கோயம்பேடு சந்தை - தமிழகத்தின் வூஹான்!

உலகத்துக்கு வூஹானிலுள்ள சந்தையைப் போல, தமிழகத்துக்கு இப்போது கோயம்பேடு மார்க்கெட். அங்கே மீன், இறைச்சி அசைவ வகையறாக்கள், இங்கே காய்கனிகள்.
கோயம்பேடு சந்தை - தமிழகத்தின் வூஹான்!

ஓய்ந்ததுபோல கருதிக்கொண்டிருந்த நிலையில் ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது.

உலகத்துக்கு வூஹானிலுள்ள சந்தையைப் போல, தமிழகத்துக்கு இப்போது கோயம்பேடு மார்க்கெட். அங்கே மீன், இறைச்சி அசைவ வகையறாக்கள், இங்கே காய்கனிகள்.

வெளிநாடுகளுக்குச் சென்றுவந்தவர்கள், அவர்களின் தொடர்புடையவர்கள் என்ற தேடத் தொடங்கிய அரசு, பின்னர் தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களையும் அவர்களுடைய தொடர்புடையவர்களையும் தேடியது. இப்போது கோயம்பேடு தொடர்புடையவர்கள். தேடத் தேடக் கிடைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள், காய்கறி வாகனங்களில் கோயம்பேடு வந்துசென்றவர்கள்.

சென்னையில் சுமார் 65 ஏக்கர் பரப்பளவிலுள்ள கோயம்பேடு சந்தைக்கு வந்து சென்றவர்கள், மார்க்கெட் மூடப்பட்டதால் கோயம்பேட்டிலிருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களில் பலர், தங்களுடன் கரோனா நோய்த் தொற்றையும் சுமந்து சென்றிருக்கின்றனர்.

தமிழகத்தில் மே 5 செவ்வாய்க்கிழமை மட்டும் 508 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 279 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். அம்மா உணவகத்தில் பணி புரிந்தவரில் தொடங்கி ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றுபவர் உள்பட பலரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 68 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் 25 பேருக்கு. இவர்களில் பலரும் கோயம்பேடு தொடர்புடையவர்கள். அரசின் அறிவிப்பிலேயே கோயம்பேடு தொடர்புடைய என்று சொல்ல வேண்டிய கட்டாயம் நேரிட்டிருக்கிறது. இன்னமும் நூற்றுக்கணக்கானோரின் பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இவ்வளவுக்கும் பிறகுதான் செவ்வாய்க்கிழமை கோயம்பேடு மார்க்கெட் முற்றிலுமாக மூடப்பட்டிருக்கிறது. இதற்குச் சில நாள்கள் முன் வரையிலும்கூட கோயம்பேட்டைவிட்டுச் செல்ல மாட்டோம் என்று வணிகர்கள் கூறிக்கொண்டிருந்தனர். இதுதொடர்பான பேச்சுவார்த்தைக்கு வந்த வணிகர் ஒருவருக்கே கரோனா தொற்றியிருப்பது பின்னர் தெரிய வந்தது. இப்போது மார்க்கெட் சம்பந்தப்பட்ட அனைவரையும் - வியாபாரிகள், விற்பனையாளர்கள், சுமை ஏற்றி இறக்குவோர், வேறு பல வேலைகளிலும் ஈடுபடுவோர் - பரிசோதனைக்குள்படுத்திக் கொண்டிருக்கிறது அரசு நிர்வாகம்.

கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து சென்றவர்களால் இப்போது பல மாவட்டங்களிலும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டிருக்கிறது. ஆரஞ்சு மாவட்டங்கள் எல்லாம் விரைவில் சிவப்பு மாவட்டங்களாக மாறிவிடும் நிலையேற்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடையோர், சென்று வந்தவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து நோய்த் தொற்று பரிசோதனை செய்துகொள்ளுமாறு நிர்வாகங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்தவர்கள் கோயம்பேடு சந்தையில் வியாபாரம் செய்து வருகின்றனர் அல்லது வேலை பார்த்து வருகின்றனர். நீலகிரி போன்ற தொலைவிலுள்ள மாவட்டங்களில் இருந்தெல்லாம்கூட நாள்தோறும் வாகனங்களில் காய்கறிகள் இங்கே கொண்டுவரப்படுகின்றன. சென்னை மாநகர் புறநகர் மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களுக்கெல்லாம் இங்கிருந்து விற்பனைக்காகக் காய்கறிகள் கொண்டுசெல்லப்படுகின்றன. தவிர, நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் தற்காலிகமாக சந்தையை மூடிவைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள் அனைவரும் அவரவர் ஊர்களுக்குத் திரும்பிச் சென்றுவிட்டனர். சந்தைக்கு வரும் வாகனங்களில் ஊர்களுக்குத் திரும்புவது இவர்களுக்கு மிகவும் எளிதாகிவிட்டது. இதனால் கரோனாவும் பரவலாகிவிட கோயம்பேட்டிலிருந்து வந்தவர்களைத் தேடத் தொடங்கியிருக்கின்றன மாவட்ட நிர்வாகங்கள்.

கோயம்பேடு தொடர்புடையோரால் கரோனா நோய்த் தொற்று வாய்ப்பு அதிகரித்திருப்பதால் இப்போது மாவட்ட எல்லைகள் மேலும் கூடுதலாகக் கண்காணிக்கப்படுகின்றன.

கோயம்பேடு சந்தையிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா நோய்த் தொற்றால் இப்போது சென்னை மாநகரும் திணறத் தொடங்கியிருக்கிறது. எங்கிருந்து, யார் மூலம் பரவியது என்பதைக் கண்டுபிடிக்க இயலாத நிலையேற்பட்டுக் கொண்டிருக்கிறது - சமூகப் பரவல்!

கோயம்பேடு சந்தையை முன்னதாகவேகூட வெவ்வேறு இடங்களுக்குப் பிரித்துவிட்டு, விற்பவர்கள், வாங்குபவர்கள், பணியாளர்கள் அனைவரிடமும் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்றச் செய்திருந்தாலும் ஓரளவு சமாளித்திருக்க முடியும். ஏற்கெனவே ஊரடங்கு நடைமுறையிலிருந்தபோதிலும் திடீரென முழு ஊரடங்கு என்றோர் அறிவிப்பு வரவும் ஆயிரக்கணக்கானோர் கோயம்பேட்டில் திரண்டனர், கலைந்தனர்.

தற்போது தக்க முன்னேற்பாடுகள் இல்லாததால், மருத்துவப் பணியாளர்கள் மட்டுமின்றித் தூய்மைப் பணியாளர்கள்,  தன்னார்வலர்கள்கூட இப்போது கரோனா தொற்றுக்காளாகியுள்ளனர்.

கோயம்பேடு சந்தைக்கு யார் யாரோ, எங்கிருந்தோ கொண்டுவந்து, யார் யாரோ,  எங்கெங்கோ கொண்டு சென்றிருக்கின்றனர், கரோனா நோய்த் தொற்றை. இவர்கள் அனைவரும் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்படாத வரை, தமிழகத்தில் கரோனா பரவல் முடிவுக்கு வந்ததாக யாராலும் துணிந்து கூற முடியாத இக்கட்டான நிலையேற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com