இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி காலமானார்

இந்தியாவின் மூத்த வழக்குரைஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரலும் பத்ம விபூஷண் விருது பெற்றவருமான சோலி சொராப்ஜி கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை காலமானார்.
பத்ம விபூஷண் விருது பெற்ற சோலி சொராப்ஜி
பத்ம விபூஷண் விருது பெற்ற சோலி சொராப்ஜி


புதுதில்லி: இந்தியாவின் மூத்த வழக்குரைஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரலும் பத்ம விபூஷண் விருது பெற்றவருமான சோலி சொராப்ஜி கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை காலமானார்.

இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி(91).  கடந்த சில நாள்களாக உடல்நல குறைவால் தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலமானார். 

சோலி சொராப்ஜி  1930 -ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். அவர் 1953 ஆம் ஆண்டில் மும்பை உயர்நீதிமன்றத்தில் தனது வழக்குரைஞர் பயிற்சியைத் தொடங்கினார். 1971 -ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். 1977 முதல் 1980 வரை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார்.

கடந்த 1989 -ஆம் ஆண்டு அட்டர்னி ஜெனரலாகவும், பின்னர் 1998 -ஆம் ஆண்டு முதல் 2004 -ஆம் ஆண்டு வரை மீண்டும் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக சோலி சொராப்ஜி பணியாற்றினார். 

மனித உரிமை வழக்குரைஞரான சொராப்ஜி 1997 -இல் நைஜீரியாவிற்கான சிறப்பு அறிக்கையாளராக ஐ.நா. நியமித்தது. 

மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான ஐ.நா. துணை ஆணையத்தில் சேர்ந்த சொராப்ஜி, 1998 முதல் 2004 வரை அதன் தலைவராக இருந்தார். சிறுபான்மையினரின் பாகுபாடு மற்றும் பாதுகாப்பு தடுப்பு தொடர்பான ஐ.நா துணை ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார். 

சொராப்ஜி  2000 முதல் 2006 வரை ஐ.நா. உலக நிரந்தர நீதிமன்றத்தில் நடுவராகவும் பணியாற்றினார்.

2002 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுஆய்வு செய்யும் ஆணையத்தில் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக போராடியதற்காக சோலி சொராப்ஜிக்கு பத்மவிபூஷண் விருதினை மத்திய அரசு வழங்கி கௌரவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com