’பணம் இருந்தால் வேட்பாளர் வாய்ப்பு’: காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஜோதிமணி எம்.பி. போர்க்கொடி

காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் விசுவாசமாக பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் பணம் இருப்பவர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படுவதாக ஜோதிமணி எம்.பி. போர்க்கொடி தூக்கியுள்ளார்.
’பணம் இருந்தால் வேட்பாளர் வாய்ப்பு’: காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஜோதிமணி எம்.பி. போர்க்கொடி
’பணம் இருந்தால் வேட்பாளர் வாய்ப்பு’: காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஜோதிமணி எம்.பி. போர்க்கொடி

காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் விசுவாசமாக பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் பணம் இருப்பவர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படுவதாக ஜோதிமணி எம்.பி. போர்க்கொடி தூக்கியுள்ளார்.

நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிடுகிறது. திமுக உடனான தொகுதி ஒதுக்கீடு இறுதியான நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு வெளிப்படையாக இல்லை என அக்கட்சியில் அதிருப்தி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி தனது சமூக வலைதள பக்கத்தில், காங்கிரஸ் கட்சியில் தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். 

மேலும் காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம். காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும், வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார். 

எனது தலைவர் ராகுல்காந்தி பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம் பி ஆகி இருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள ஜோதிமணி இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு என ஜோதிமணி தனது பதிவில் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக அக்கட்சியில் எழுந்துள்ள அதிருப்தி அரசியல் அரங்கில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com