திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் தெப்போற்சவம்

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் தெப்போற்சவம்

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் திருத்தேர் திருவிழாவை ஒட்டி, மகாமக தெப்பக்குளத்தில் தெப்போற்தசவம் கோலாகலமாக இன்று (சனிக்கிழமை) இரவு நடைபெற்றது.
Published on


அவிநாசி: திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் திருத்தேர் திருவிழாவை ஒட்டி, மகாமக தெப்பக்குளத்தில் தெப்போற்தசவம் கோலாகலமாக இன்று (சனிக்கிழமை) இரவு நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீர்க்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் தேர்த் திருவிழா பிப்.11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகின்றன.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) இரவு, மகாமகக் குளத்தில் நீர் தெப்பத்தேர் உற்சவம் நடைபெற்றது. இதில் நீர் நிரப்பட்டிருந்த தெப்பத்தில், அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சந்திரசேகரர் அம்பாள் எழுந்தருளி, தெப்போற்சவம் நடைபெற்றது.

தெப்பக்குளம், நீராழி மண்டபம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வான வேடிக்கை, நாதஸ்வர இசை முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத தெப்போற்சவம் நடைபெற்றது. சுவாமி தெப்பத்தை 11 முறை வலம் வரும் போது, மல்லாரி, ஓடம், கீர்த்தனை, திருப்புகழ், மங்கலம் உள்ளிட்ட ராக தாளங்கள் வாசிக்கப்பட்டது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை 4 மணி முதலே தெப்பப் படிக்கட்டுகளில் காத்திருந்து சுவாமிக்கு மலர் தூவி தரிசனம் செய்தனர்.

முன்னதாக மகாமகப் பிள்ளையாருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையடுத்து 20-ஆம் தேதி ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழாவும் நடைபெறுகிறது.  வரும் 21ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும், 22ஆம் தேதி மஞ்சள் நீர் திருவிழா, மயில் வாகனக்காட்சி ஆகியவற்றுடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com