‘முதுகெலும்புடன் அதிமுக செயல்படுவதில்லை’: பாஜக எம்எல்ஏ கருத்தால் சலசலப்பு

மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அதிமுக குறித்து விமர்சித்தது அக்கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜகவினர்
வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜகவினர்
Published on
Updated on
1 min read

கட்டாய மதமாற்றத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அதிமுக குறித்து விமர்சித்தது அக்கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்ட பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை தீவிரமாகக் கையிலெடுத்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவியின் மரணத்தை சிபிஐ விசாரணை நடத்தக்கோரி அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இந்நிலையில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்து தற்போது அதிமுகவினரை கோபமடையச் செய்துள்ளது. உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன்,“திமுக 4 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்குமா என்பது தெரியாது. அடுத்தமுறை திமுக ஆட்சியில் அமரப் போவதில்லை. அதற்குப் பிறகு பாஜக தமிழகத்தை ஆளும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,“சட்டப்பேரவையில் தைரியமாக முதுகெலும்புடன், ஆண்மையுடன் பேசக் கூடிய கட்சியாக அதிமுகவை நான் பார்க்கவில்லை. 4 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் மட்டுமே இருக்கும் நம்மால் பலத்த குரலை எழுப்ப முடிவதில்லை” எனத் தெரிவித்தார்.

நயினார் நாகேந்திரனின் இந்தக் கருத்து அதிமுகவினரை ஆத்திரமடையச் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து இதுகுறித்து விளக்கமளித்துள்ள நயினார் நாகேந்திரன், “அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை. போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்” என தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் தெரிவித்த கருத்து கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com