பிப்.19இல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
By DIN | Published On : 26th January 2022 06:36 PM | Last Updated : 26th January 2022 06:48 PM | அ+அ அ- |

பிப்.19இல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு எந்தவித தடையுமில்லை என்று உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில்,தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
படிக்க | திமுகதான் ஓபிசி இடஒதுக்கீட்டை 31% ஆக உயர்த்தியது: முதல்வர் ஸ்டாலின்
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
அதன்படி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தப்படும் எனவும் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கும் வேட்புமனுத்தாக்கல் பிப்ரவரி 4ஆம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிப்ரவரி 19ஆம் தேதி காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் மூலம் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் பதவிகளுக்கான விவரங்கள்
தமிழகத்தில் மொத்தமுள்ள 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது. 21 மாநகராட்சிகள், 128 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 8,288 பேரூராட்சிகள் உறுப்பினர்கள், 3,468 நகராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...