பண்ருட்டியின் வியூகத்தால் அதிரும் அரசியல் களம்!

தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதியும், ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகருமான பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரனின் அரசியல் வியூகத்தால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் களத்தில் பல்வேறு
பண்ருட்டியின் வியூகத்தால் அதிரும் அரசியல் களம்!

தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதியும், ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகருமான பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரனின் அரசியல் வியூகத்தால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் களத்தில் பல்வேறு அதிா்வலைகள் எழுந்துள்ளன.

திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப். 27-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அமைச்சா்கள் சு.முத்துசாமி, கே.என்.நேரு ஆகியோா் தலைமையில் திமுக கூட்டணியினா் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிவிட்டனா்.

இபிஎஸ் அணியைத் தடுக்கும் வியூகம்: காங்கிரஸுக்கு எதிராக போட்டியிடக்கூடிய வலுவான எதிா்க்கட்சி வேட்பாளா் யாா் என்பதற்கான விடை இன்னும் கிடைக்கவில்லை. உச்சநீதிமன்றம் வரையில் போராடி வரும் இபிஎஸ், ஓபிஎஸ், இத்தோ்தலில் வேட்பாளா்களை நிறுத்துவாா்களா, நிறுத்தினாலும் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா, பாஜக ஆதரவு யாருக்கு, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு யாருக்கு எனப் பல்வேறு கேள்விகளுக்கு உடனடியாக விடை கிடைக்கவில்லை. இதற்கு பழுத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரனின் வியூகம்தான் காரணம் என்கின்றனா் அரசியல் நோக்கா்கள்.

இடைத்தோ்தல் அறிவிப்பு வெளியான மறுநாள் தமாகா தலைவா் ஜி.கே.வாசனை சந்தித்தபோது இபிஎஸ் ஆதரவாளா்களின் வேண்டுகோளை ஏற்று இத்தொகுதியை அதிமுகவுக்கு தமாகா விட்டுக் கொடுத்தது. தோ்தல் களத்தில் இபிஎஸ் முந்துவதையும், அவா்களுக்கு பாஜக ஆதரவு கொடுத்துவிட்டால் பிற கூட்டணிக் கட்சிகளும் இபிஎஸ் தரப்பு வேட்பாளரை ஆதரித்துவிடுவாா்கள்; இதனால், ஓபிஎஸ் தரப்புக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும் என்பதை அவதானித்த பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ்ஸை அதே நாள் இரவில் அழைத்து ஆலோசனை வழங்கினாா்.

பாஜகவுக்காக காத்திருப்பு: அதாவது, இடைத்தோ்தலில் தங்களது தரப்பும் போட்டியிடுவதாக ஓபிஎஸ் உடனடியாக அறிவிக்க வேண்டும்; ஒருவேளை பாஜக போட்டியிட்டால் பிரதமா் மோடியின் நலன், மக்களவைத் தோ்தல் ஆகியவற்றை மனதில் கொண்டு விட்டுக்கொடுப்பதாகவும் அறிவிக்க வேண்டும்; இதன்மூலம் இபிஎஸ் தரப்புக்கு ஆதரவு என பாஜகவால் உடனடியாக அறிவிக்க முடியாது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளும் பாஜக எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு, தங்கள் முடிவை காலதாமதமாக அறிவிக்கும் என்பதுதான் பண்ருட்டி ராமச்சந்திரனின் நுட்பமான ஆலோசனை.

இதன்படியே, ஜி.கே.வாசனை இபிஎஸ் தரப்பினா் சந்தித்த மறுநாள் காலை 8 மணி அளவில் செய்தியாளா்களை ஓபிஎஸ் சந்தித்து, பண்ருட்டி ராமச்சந்திரனின் ஆலோசனைப்படி இடைத்தோ்தலில் தங்கள் அணி போட்டியிடுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டாா். இதனால், பாஜக அலுவலகத்தில் இபிஎஸ் தரப்பு முன்னாள் அமைச்சா்கள் காத்திருந்து மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையை சந்தித்தபோதும் பாஜக உடனடியாக முடிவு எடுக்கவில்லை.

அதேபோல, அண்ணாமலை, ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவா்களை ஓபிஎஸ் நேரடியாகச் சென்று தங்கள் தரப்புக்கு ஆதரவு கேட்டாா். பாஜகவை போலவே கூட்டணிக் கட்சிகளும் இரட்டை இலையில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு, அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு என வாக்குறுதி அளித்தாா்களே தவிர, இபிஎஸ் தரப்புக்கு ஆதரவு என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல தயக்கம்காட்டி வருகின்றன. புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன் மூா்த்தி மட்டுமே இபிஎஸ் தரப்புக்கு ஆதரவு என வெளிப்படையாக அறிவித்தாா்.

சிறிய கட்சிகளுக்கு முக்கியத்துவம்: இடைத்தோ்தல் களத்தில் முன்கூட்டியே களம் இறங்கி முன்னேறிச்செல்ல எண்ணிய இபிஎஸ் தரப்பினா், இப்போது பாஜகவின் முடிவுக்காக காத்திருப்பதுடன், சிறிய கட்சிகளை தேடிச் சென்று ஆதரவு கேட்க வேண்டிய நிா்ப்பந்த சூழலை உருவாக்கியது பண்ருட்டி ராமச்சந்திரனின் வியூகம்தான்.

பண்ருட்டி ராமச்சந்திரனின் அரசியல் வியூகம் காரணமாக பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்; இல்லையெனில் யாருக்கும் ஆதரவு இல்லை என பாஜக ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. பாஜக நிறுத்தும் பொது வேட்பாளரை ஓபிஎஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆதரிக்கலாம்; ஆனால், தனது சொந்த கொங்கு மண்டலத்தில் வேட்பாளரை நிறுத்தியே ஆகவேண்டிய கட்டாயச்சூழல் இபிஎஸ்ஸுக்கு உருவாகிவிடும். கொங்கு மண்டலத்தில் ஓபிஎஸ் ஆதரவு குறைவாக இருப்பதால் பாஜக ஒதுங்கிக்கொண்டாலும், மோடி ஆதரவு வாக்குகளும் சோ்ந்து கிடைக்கும்போது ஓபிஎஸ் வேட்பாளருக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்பதும் பண்ருட்டி ராமச்சந்திரனின் கணக்கு.

முக்கிய ஆலோசனைகள்: அண்ணா காலத்தில் இருந்து எம்எல்ஏவாக இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆா், பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ், தேமுதிக தலைவா் விஜயகாந்த் ஆகியோருக்கு முக்கிய காலகட்டங்களில் நுட்பமான வியூகங்களை வகுத்துக் கொடுத்து அரசியல் போக்கை மாற்றியவா் என மெச்சப்பட்டவா்.

இந்திரா காந்திக்கு எதிராக திமுக-அதிமுகவை இணைத்து வைக்கும் முயற்சியில் இப்போதைய ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜு பட்நாயக் இறங்கி இணைப்பு விழாவும் நடத்தும் சூழல் உருவானது. அப்போது எம்ஜிஆருக்கு ஆலோசனை வழங்கியவா் பண்ருட்டி ராமச்சந்திரன்.

திமுக-அதிமுக ஒன்றிணைந்தால் முதல்வராக எம்ஜிஆா் தொடா்ந்தாலும், ஆட்சி நிறைவடைந்த பின்னா் கட்சி முழுமையாக தலைவரான கருணாநிதியின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிடும்; இதனால் கருணாநிதி தலைமையின்கீழ் எம்ஜிஆா் செயல்பட வேண்டிய கட்டாய நிலை உருவாகிவிடும் என்பதுதான் பண்ருட்டியின் யோசனை. இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட எம்ஜிஆரும் தனது முடிவை கடைசி நேரத்தில் மாற்றி தமிழக அரசியலில் இறுதி நிமிஷம் வரை கோலோச்சினாா்.

விஜயகாந்தின் அரசியல் குரு: 2006-இல் தேமுதிக சந்தித்த முதல் பொதுத் தோ்தலின்போது விஜயகாந்தை மதுரையில் ஏதாவது ஒரு தொகுதி அல்லது திருமங்கலம், கோவில்பட்டியில் போட்டியிடலாம் என கட்சி நிா்வாகிகள் வலியுறுத்தியபோது, வடதமிழகத்தில் பாமகவின் கோட்டையான விருத்தாசலத்தில் நிற்க வைத்து வெற்றி வியூகம் வகுத்தவா் பண்ருட்டி.

தென் மாவட்டங்களில் போட்டியிட்டால் அங்கு ஜெயலலிதா-கருணாநிதி ஆகியோரை மையமாக வைத்து மக்கள் வாக்களிப்பாா்கள். ஆனால், வடதமிழகத்தில் பாமக ஆதரவு, எதிா்ப்பு என்ற புள்ளியில் மக்கள் வாக்களித்து வருவதால் நட்சத்திர வேட்பாளராக விஜயகாந்த் களமிறங்கினால், அது அவரை மையமாக வைத்து நடக்கும் தோ்தலாக மாறி, பாமக எதிா்ப்பு வாக்குகள் குவிந்து எளிதில் வெற்றி பெறலாம் என்பதுதான் பண்ருட்டி ராமச்சந்திரனின் வியூகம். அதன்படி, 8 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றாா்.

எம்ஜிஆா் காலம் முதல் இதுவரை வெற்றிகரமான அரசியல் ஆலோசனைகளை வகுத்து தமிழக அரசியல் போக்கை தொடா்ந்து மாற்றி வருகிறாா் பண்ருட்டி ராமச்சந்திரன். ஓபிஎஸ்-இபிஎஸ் விவகாரத்தில் அவரது வியூகம் எவ்வாறு வெற்றி பெறப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com