
கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கோவை தெற்கு தொகுதியில் ஹிந்தி மொழியில் பேசி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.வாக்காளர்களை கவரும் விதமாக வேட்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கோவை தெற்கு தொகுதியில் ஹிந்தி மொழியில் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
செட்டி வீதி, பெரிய கடை வீதி, பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றவாறு அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அவரோடு கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் உடன் இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக வட இந்திய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய தெப்பக்குளம் மைதானத்தில் பிரசாரம் மேற்கொண்ட அண்ணாமலை, ஹிந்தி மொழியில் பேசி வாக்கு சேகரித்தார். அப்போது வட இந்திய மக்களிடம் ஹிந்தியில் உரையாற்றிய அண்ணாமலை, அனைவருக்கும் வணக்கம்,எல்லோரும் தயவு கூர்ந்து நினைவு கொள்ளுங்கள் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நமது தாமரை மலர தங்களது அனைத்து குடும்பங்களுக்கும் தெரியப்படுத்துங்க,நல்லதொரு இந்தியாவை கொண்டு வருவதற்கு நல்ல மனிதரான மோடியை மீண்டும் பிரதமராக கொண்டு வருவதற்கு கோவையில் உள்ள தங்களது குடும்பத்தினர் அனைவரும் தாமரைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.