ராகுல் காந்தி பேரணியில் காங்கிரஸ் தவிர்த்த கொடி அரசியல்!

கொடிகளைத் தவிர்ப்பதன் மூலம் தேவையற்ற அரசியலைத் தவிர்த்த காங்கிரஸ் பற்றி...
கொடிகளற்ற பேரணியில்...
கொடிகளற்ற பேரணியில்...பி.டி.ஐ.

கல்பேட்டை: மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்ய வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி புதன்கிழமை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற பெரும் பேரணியில் காங்கிரஸ் உள்பட எந்தவோர் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் கொடியும் இடம் பெறவில்லை. தொண்டர்கள் யாரும் கொடியேந்தி வரவில்லை; மிகக் கவனமாகக் கட்சிக் கொடிகள் தவிர்க்கப்பட்டன.

2019 மக்களவைத் தேர்தலின்போது, இதேபோல ராகுல் காந்தி சென்ற பேரணியில் அதிக அளவில் காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான முஸ்லிம் லீகின் பச்சைக் கொடிகள் இடம்பெற்றிருந்தன.

கொடிகளற்ற பேரணியில்...
முஸ்லிம் லீக் கொடிகளைக் கொண்டுவர ‘வெட்கப்படுகிறார்’ ராகுல் – ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

இதையே ஒரு விஷயமாக எடுத்துக்கொண்டு, பாகிஸ்தானிலா ராகுல் காந்தி வாக்குக் கேட்கிறார்? என்று விமர்சித்து தேசிய அளவில் அமித் ஷா போன்ற பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களே பிரசாரம் செய்தனர். வட இந்தியாவில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைக் குலைப்பதில் பா.ஜ.க.வின் இந்தக் குற்றச்சாட்டும் கணிசமான பங்களித்தது.

இந்த முறை இப்படியொரு வாய்ப்பளிக்கத் தயாராக காங்கிரஸ் இல்லை. கொடிகளுக்குப் பதிலாக ராகுல் காந்தி பங்கேற்ற நேற்றைய பேரணியில் மூவண்ண பலூன்களும் தொப்பிகளும் பதாகைகளும் இடம் பெற்றன.

ராகுலுடன் திறந்த வாகனத்தில் ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தியும் கட்சியின் அகில இந்தியச் செயலர் கே.சி. வேணுகோபால், கூட்டணியின் தொகுதித் தேர்தல் குழுத் தலைவர் பனக்காடு சய்யீத் அப்பாஸ் அலி ஷிகாப் தங்கல், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி போன்றோரும் பங்குபெற்றனர்.

பேரணியில் கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் எதுவுமே இடம் பெறாததால் யாரும் எதுவும் கூற முடியாமல் போய்விட்டது. 2019 தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற முடியாமல் போனதற்கேகூட அப்போதைய வயநாடு பேரணியும் முஸ்லிம் லீகின் பச்சைக் கொடிகளும் ஒரு காரணம் எனக் கருதப்பட்டது.

கொடிகள் இல்லை...
கொடிகள் இல்லை...

ஆனால், இப்போது மற்றவர்கள் விமர்சித்துப் பிரசாரம் எந்த வாய்ப்பும் அளித்துவிடுவதில்லை என்பதில் காங்கிரஸ் தெளிவாக இருந்துவிட்டது. தேர்தல் பேரணியிலோ, கூட்டங்களிலோ முஸ்லிம் லீக் கொடிகளை மட்டுமே தவிர்ப்பதும்கூட தேவையில்லாத வேறு சங்கடங்களை அல்லது மன வருத்தங்களை உருவாக்கக் கூடும் என்பதால் ஒட்டுமொத்தமாக அனைத்துக் கட்சிக் கொடிகளையுமே தவிர்த்துவிட காங்கிரஸ் முடிவு செய்துவிட்டது.

தேர்தல்களில் கொடிகள் முக்கியமல்ல, ராகுல் காந்தியும் கைச் சின்னமும்தான் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார் கல்பேட்டை எம்எல்ஏ டி. சித்திக். கொடியைக் கொண்டுவருவதற்கே யோசிக்கும் காங்கிரஸ் எவ்வாறு முஸ்லிம்களின் பிரச்சினைகளை எழுப்பும் என்று கூறுவோரும் இருக்கின்றனர்.

பேரணியின் முடிவில் பேசிய ராகுல் காந்தி முற்றிலும் உள்ளூர்க்காரராகவே மாறியிருக்கிறார்: முக்கியமான மூன்று பிரச்சினைகளை – மனித – விலங்குகள் மோதல், இரவுப் பயணங்களுக்குள்ள தடை, மருத்துவக் கல்லூரி அமைப்பது -  தீர்ப்பதில் வயநாடு மக்களுடன் இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.

மக்களுடன்...
மக்களுடன்...பி.டி.ஐ.

ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் மாலையில் கல்பேட்டையிலுள்ள மரவயல் பழங்குடியினர் காலனியில் தேர்தல் வாக்குறுதிப் பிரசுரங்களை விநியோகித்து வாக்குகளைச் சேகரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com