
விஜயபுரா: பிரதமர் நரேந்திர மோடி அச்சத்தில் இருப்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது. விரைவில் அவர் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும் என தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளின் பணத்தை பிரதமர் மோடி கொள்ளையடித்துள்ளார் என்று குற்றம்சாட்டினார்.
கா்நாடக மாநிலம், விஜயபுராவில் வெள்ளிக்கிழமை நடந்த காங்கிரஸ் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் பங்கேற்று பேசுகையில்,
தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாய்ப்புகள் குறித்து பிரதமர் மோடி அச்சமடைந்துள்ளதாகவும், பாஜக அரசு ஒரு சிலரை கோடீஸ்வரர்களாக்கும் அதே வேளையில், கோடீஸ்வரர்களிடம் குவிந்துள்ள பணத்தை திரும்பப்பெற்று கோடிக்கணக்கான ஏழை மக்களை லட்சாதிபதிகளாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்று ராகுல் தெரிவித்தார்.
மேலும் “நீங்கள் மோடியின் பேச்சைக் கேளுங்கள் அவர் பதட்டமாக இருப்பது தெரியும். விரைவில் அவர் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும் என்று அவர் கூறினார்.
வறுமை, வேலையின்மை, விலைவாசி உயா்வு போன்ற பிரச்னைகள் ‘உண்மையான’ பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு தயங்கும் பிரதமா் மோடி, மக்களின் கவனத்தை திசை திருப்பி வருவதாக குற்றம் சாட்டினார். நாட்டு மக்கள் எதிா்கொண்டுள்ள பிரச்னைகளை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தீர்க்க முடியும் என கூட்டத்தில் ராகுல் காந்தி கூறினார்.
பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்துள்ளார் என்று குற்றம் சாட்டிய ராகுல், 70 கோடி மக்களிடம் உள்ள வளங்களுக்கு இணையான வளம் வெறும் இருபத்தி இரண்டு பேரிடம் உள்ளது. நாட்டின் 40 சதவீத வளங்களை ஒரு சதவீத மக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மோடி கோடீஸ்வரர்களுக்கு அளித்த பணத்தை; நாட்டின் ஏழைகளுக்கு அளிக்க கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது” என்று காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டார்.
தற்போதைய ஆட்சியில் தாழ்த்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா், பழங்குடியினா், சிறுபான்மையினா், பொதுப் பிரிவு ஏழைகள் முன்னேறுவதற்கான வாய்ப்பே இல்லை.
பிரதமர் மோடி மற்றும் பாஜகவை குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, இந்திய வரலாற்றில் முதல்முறையாக, நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் சீா்குலைக்க, ஒரு கட்சியும் ஒரு நபரும் முயற்சித்து வருகிறாா்கள் என்று மேலும் குற்றம் சாட்டினார். தேர்தலில் வெற்றி பெற்றால் அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று பாஜக எம்பிக்கள் கூறியுள்ளனர். மறுபுறம், காங்கிரஸ் கட்சியும் இந்திய கூட்டணியும் அரசியலமைப்பு சட்டத்தையும் (சமூக சீர்திருத்தவாதி) பசவண்ணாவின் லட்சியங்களையும் பாதுகாக்க முயல்கின்றன,” என்று அவர் கூறினார்.
கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் 20-25 பேரை கோடீஸ்வரர்களாக்க மோடி உதவியுள்ளார். துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்புத் திட்டங்கள், சோலார் திட்டங்கள் உள்ளிட்டவை கெளதம் அதானி போன்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
நியாயத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம், எங்கள் அரசாங்கம் கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக மாற்றப் போகிறது,” என்று அவர் கூறினார்.
பின்னர் பல்லாரியில் நடந்த மற்றொரு பேரணியில் பேசிய ராகுல் காந்தி, மோடி ஆட்சியின் கீழ், நாட்டில் வேலையின்மை கரோனா தொற்று போல பரவியுள்ளது.
கரோனா தொற்று பரவலின் போது மக்களை கைகளை தட்டுமாறு கேட்டுக்கொண்ட பிரதமர், இப்போது இளைஞர்களை பக்கோடா (பஜ்ஜி) செய்யச் சொல்கிறார் என்று ராகுல் கூறினார்.
மோடி ஆட்சியில் ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இது 25 ஆண்டுகளுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் சராசரி ஊதியத்திற்கு சமம்,” என்று அவர் மேலும் கூறினார்.
கர்நாடகாவில் 14 மக்களவைத் தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.