யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

"நாட்டின் அடுத்த பிரதமராக யாா் இருந்தாலும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக (ஜிடிபி அடிப்படையில்) இந்தியா மாறுவது தவிர்க்க முடியாதது"
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம்.

கொல்கத்தா: "நாட்டின் அடுத்த பிரதமராக யாா் இருந்தாலும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக (ஜிடிபி அடிப்படையில்) இந்தியா மாறுவது தவிர்க்க முடியாதது" என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பிடிஐக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாா்.

தனது தேர்தல் பிரசாரங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தனது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடி, தான் மூன்றாவது முறையாக பிரதமரானால் மட்டுமே,நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை விட இரண்டு இடங்களுக்கு உயர்ந்து, நாட்டை மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவேன் என்று நாட்டு மக்களுக்கு "உத்தரவாதம்" அளித்து வருகிறார்.

இந்த நிலையில், "நாட்டின் அடுத்த பிரதமராக யாா் இருந்தாலும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக (ஜிடிபி அடிப்படையில்)இந்தியா மாறுவது தவிர்க்க முடியாதது" என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் சிதம்பரம் கூறியதாவது:

சிறிய விஷயத்தைக்கூட மிகைப்படுத்தி பேசுவதில் நரேந்திர மோடி வல்லவர். இயல்பாக நடக்கும் விஷயங்களைக் கூட தனது சாதனையைப்போல பேசிக் கொள்பவா்.

உண்மையில் யாா் அடுத்த பிரதமரானாலும் இந்தியாவின் பொருளாதாரம் சா்வதேச அளவில் மூன்றாவது (ஜிடிபி அடிப்படையில்)இடத்தை எட்டுவது தவிர்க்க முடியாதது.

ஏனெனில் இந்தியா அதன் மக்கள்தொகையின் அளவைக் கருத்தில் கொண்டும்,அவா்களின் வாங்கும் திறன், பொருளாதார செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டும் இந்த சாதனை எட்டப்படும். இதில் ஆட்சியாளா்கள் யாரும் "எந்த மாயமந்திரமும்" நிகழ்த்த வேண்டியதில்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தியா தனது பொருளாதார சாதனைகளை எட்டிக் கொண்டுதான் இருக்கும்.

2004-இல் இந்தியா ஜிடிபி வளா்ச்சியில் 12-ஆவது இடத்தில் இருந்தது. 2014-இல் ஏழாவது இடத்துக்கு உயா்ந்தது. 2024-இல் ஐந்தாவது இடத்துக்கு வந்தது. யார் பிரதமராக இருந்தாலும்,அடுத்ததாக மூன்றாவது இடத்துக்கு இந்தியா முன்னேறும். இதில் எந்த மாயமந்திரமும் இல்லை.

உலகப் பொருளாதாரத் தரவரிசை 2024 இன் படி, இந்தியாவின் ஜிடிபி அமெரிக்க டாலர் மதிப்பில் 4.8 லட்சம் கோடியாக உள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பானுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. அடுத்த இடத்தில் ஜெர்மனி உள்ளது.

உலகின் முதல் 10 பொருளாதார நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரான்ஸ், இத்தாலி, பிரேசில், கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் அந்தந்த தரவரிசையில் இந்தியாவை விட கீழே உள்ளன.

நான்கு முறை மத்திய நிதியமைச்சராகப் பணியாற்றிய சிதம்பரம், "எனது பார்வையில்,ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு அதன் மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கான உண்மையான கணக்கீடு அல்ல என்றும், தனிநபர் வருமானம் எவ்வளவு உயா்ந்துள்ளது என்பதே மிகவும் துல்லியமான கணக்கீடாகும் என்றும் வலியுறுத்தினார்.

ஆனால் இந்த விஷயத்தில் சா்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது" என்று அவர் கூறினார்.

சா்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எஃப்) 2024 கணக்கெடுப்புப் படி, இந்தியா அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் யுஎஸ்டி 2,731 உடன் சா்வதேச தரவரிசை பட்டியலில் 136 ஆவது நாடாகவே உள்ளது.

பிரதமா் மோடி தனது தேர்தல் பிரசாரத்தின்போது இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை தனது சாதனையாக பேசி வருகிறாா். தான் மீண்டும் பிரதமரானால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் 3-ஆவது இடத்துக்கு உயரும் என்று கூறி வருகிறாா். இது நாட்டின் சாதனையை தனதாக்கி, ஆதாயம் தேடும் முயற்சிதான் என்றார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை (சிஏஏ)கட்சி அறிக்கையிலிருந்து காங்கிரஸ் வேண்டுமென்றே விலக்கிவிட்டதா என்ற கேள்விக்கு, “சிஏஏ-வை காங்கிரஸ் எதிா்க்கிறது. ஆனால் அது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம்"என்றார்.

டிசம்பர் 31, 2014க்கு முன்னர் மதத் துன்புறுத்தல் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்து, புத்த, சீக்கிய, ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க சிஏஏ முயல்கிறது.

சட்டப்பிரிவு 370 இல், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து மீண்டும் அளிக்கப்படும்.இதனை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் தெளிவாகக் கூறியுள்ளோம் என்று சிதம்பரம் கூறினார்.

சட்டப்பிரிவு 370 மீதான இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் (மத்திய அரசின் ரத்து முடிவு சரி என்று) அறிவித்துள்ளது என்றாா்.

தீர்ப்பை நாங்கள் ஏற்கலாம் அல்லது ஏற்காமலும் போகலாம், ஆனால் அதுதான் சட்டம்," என்று அவர் கூறினார்.

இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 ஆவது பிரிவை ரத்து செய்வதற்கான மத்திய அரசின் 2019 முடிவை ஒருமனதாக உறுதி செய்தது.

சட்டப்பிரிவு 370 என்பது ஒரு "தற்காலிக ஏற்பாடு" என்றும், இது மாநிலத்தில் போர்க்கால நிலைமைகளை அடுத்து இயற்றப்பட்டது மற்றும் ஒரு இடைக்கால நோக்கத்திற்கு சேவை செய்வதாக இருந்தது என்றும் அந்த அமர்வு சுட்டிக்காட்டியது.

சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்வதைத் தவிர, அந்த ஆண்டு மறுசீரமைப்புச் சட்டத்தை மத்திய அரசு ஒரே நேரத்தில் நிறைவேற்றியது, இது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாநிலத்தை மறுசீரமைத்தது.

மறுசீரமைப்பு அக்டோபர் 31, 2019 முதல் அமலுக்கு வந்தது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளது தொடா்பான கேள்விக்கு,நிா்மலா சீதாராமனுக்கு எந்த மாநிலத்திலும் அரசியல் செல்வாக்கு இல்லை. எனவே, தோ்தலில் போட்டியிட்டால் மோசமாக தோல்வியடைவாா் என்பது அவருக்கும் தெரியும்.சொந்த மாநிலமான தமிழகத்தில் போட்டியிட்டாலும் அவருக்கு மோசமான தோல்விதான் கிடைக்கும்.

நிர்மலா சீதாராமனின் அரசியல் எதிர்காலம் குறித்து என்னால் கூற முடியாது. அவர் நலமாக இருக்க வாழ்த்துகிறேன் என்றும் சிதம்பரம் கூறினார்.

"தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பாஜக மிகப்பெருமளவில் பணம் திரட்டி வைத்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com