
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மலையேறி சென்ற கோவை சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி(54) என்பவர் வெள்ளிக்கிழமை பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து கரடு முரடான மலைப்பாதை வழியாக சுமார் 10 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும்.
ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 1 முதல் 5ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. வியாழக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு 7 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். வெள்ளிகிழமை காலை 6 மணி முதல் 6 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறத் தொடங்கினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணார் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (56). இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு சார்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது மனைவி புவனேஸ்வரி மற்றும் உறவினர்களுடன் சுவாமி தரிசனம் செய்வதற்காக சதுரகிரி மலையேறி சென்றார். சதுரகிரி மலைப்பாதையில் சென்றுக்கொண்டிருந்த போது, சுப்பிரமணியன் மயங்கி விழுந்தார்.
அவரை டோலி மூலம் தாணிப்பாறை அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சுப்பிரமணியன் உடல் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சாப்டூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.