
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்துக்கான நிகழாண்டு (2024-25) நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஆக.2) தாக்கல் செய்தார்.
புதுவை சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை (2024-25) கூட்டத்தொடா் துணைநிலை ஆளுநா் உரையுடன் புதன்கிழமை தொடங்கியது. துணைநிலை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் வியாழக்கிழமை (ஆக.1) நடைபெற்றது.
இதையடுத்து நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை (ஆக.2) காலை 9 மணி முதல் 156 பக்கங்கள் கொண்ட புதுச்சேரி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.1
ஏற்கெனவே மாநிலத்தின் 6 மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, கடந்த மாா்ச்சில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 6 மாதங்களுக்கான ரூ.12,700 கோடிக்கான நிதிநிலை அறிக்கை தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த முதல்வர் ரங்கசாமி, மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடிக்கு பேரவையில் தனது வாழ்த்தை தெரிவித்தார்.
உள்நாட்டு நிதி வருவாயாக ரூ.6,914 கோடியாகவும், மத்திய அரசின் கொடை ரூ.3,268 கோடியும், நிதி பற்றாக்குறையை போக்க ரூ.2, 066 கோடி கடன் வாங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் ரங்கசாமி தெரிவித்தார்.
நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
* இந்த ஆண்டு முதல் நியாய விலை கடைகள் திறந்து அதன் மூலம் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு வகைகள், சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகிய பொருள்கள் வழங்கப்படும்.
* குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய குடும்ப அட்டை வேண்டுவோர் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
* காரைக்காலில் பழைமையான அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
* பாரதியார் மற்றும் பாரதிதாசன் அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும்
* மாணவர்களுக்கு காலணி, புத்தகப்பை வழங்கப்படும்.
* மீன்பிடி தடைக்கால நிவாரண் தொகை ரூ.6,500 இல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* மழைக்கால நிவாரணத் தொகை ரூ.3,000 இல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும்.
* புதுச்சேரியில் பிராந்திய அளவில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான தலா ரூ.20,000, ரூ,15,000 மற்றும் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* பாடப்பிரிவு வாரியாக 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து அரசுக் கல்லூரியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதங்கள் நடைபெறும். இதைத் தொடா்ந்து, ஆகஸ்ட் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் முதல்வா், அமைச்சா்களின் துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள், முன்மொழிதல் மீதான விவாதங்கள், வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
ஆகஸ்ட் 12, 13-ஆம் தேதிகளில் அமைச்சா்கள், முதல்வரின் பதிலுரைகள் இடம்பெறுகிறது. இதேபோல, ஆகஸ்ட் 14- ஆம் தேதி தனி நபா் தீா்மானங்கள் இடம்பெறுகிறது. அதன் பிறகு, அவை நிகழ்வுகள் தள்ளிவைக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.