
நெல் விவசாயிகள் நலன் கருதி நடப்பாண்டிலும் (2024-25) செப். 1 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர. சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2002-2003 காரிஃப் பருவம் முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முகவராகச் செயல்பட்டு ஒவ்வொரு பருவத்திலும் அக்டோபர் 1-ந் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
நெல் விவசாயிகள் நலன் கருதி முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி அனுமதி பெற்றுத்தந்ததால் 2022-2023 காரிஃப் பருவத்திலிருந்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
2023 – 24 காரிஃப் பருவத்தில் 31.07.2024 வரை 3200 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3,85,943 விவசாயிகளிடமிருந்து 33,24,166 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 7,277.77 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2024-2025 காரிஃப் பருவத்திற்கு சன்னரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலையான ரூ.2320/- உடன் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ. 130/- சேர்த்து சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2450/- என்ற விலையிலும் பொதுரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 2300/- உடன் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ. 105/- சேர்த்து பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2405/- என்ற விலையிலும் நெல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்குத் தேவைப்படும் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படும். ஆதலால், விவசாயிகள் 01.09.2024 முதல் புதிய கொள்முதல் விலையில் தங்களது நெல்லினை அரசு சார்பில் நடத்தப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்றுப் பயனடையுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.