
தஞ்சாவூர்: திருவையாறு காவிரி படித்துறையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி, பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் வைத்து புதுமண தம்பதிகள் மற்றும் மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18 ஆம் தேதி பெண்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். விவசாயத்திற்கு உறுதுணையாக பொங்கி வரும் காவிரியை வரவேற்கும் விழாவாகும். காவிரி ஆற்றின் கரைகள் மற்றும் நீர் நிலைகளில் பெண்கள் காப்பரசி, ஆப்பிள், விலாம்பழம், சாத்துக்குடி போன்ற பழங்கள், காதோலை கருகமணி போன்ற பொருள்களை வைத்து காவிரி தாயை வழிப்படுவார்கள். ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு அணிந்து கொள்வார்கள்.
இந்த நிலையில், பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ப மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஆடிப்பெருக்கு கொண்டாடி வருகின்றனர்.
இதேபோன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கால்வாய், வடவாறு என பல்வேறு நீர்நிலைகளில் ஆடி பெருக்கு விழாவை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தஞ்சை மட்டுமல்லாது அருகே உள்ள மாவட்டங்களான புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர்
உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் குடும்பத்துடன் வந்து ஆடிப்பெருக்கு விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். காவிரி படித்துறையில் பழங்கள், பூ, சந்தனம் உள்ளிட்டவை வைத்து சிறப்பு வழிபாடு செய்து, தாலி பிரித்து கட்டியும் வழிபாடு செய்து வருகின்றனர்.
இதனையடுத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் பொதுமக்கள் ஆறுகளில் இறங்காதவாறு தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.