
வங்கதேசத்தில் உள்ள 19,000 இந்தியர்களில் 9,000 பேர் மாணவர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளதாகவும், டாக்காவில் உள்ள இந்திய மக்களிடம் நெருக்கமான தொடர்பில் இருப்பதாகவும் மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான மாணவர்கள் ஜூலை மாதமே இந்தியாவுக்கு திரும்பியதாகவும் ஜெய்சங்கர் மக்களவையில் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து வன்முறை நடைபெற்று வரும் நிலையில், ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ராணுவ விமானம் மூலம் நேற்று(ஆக. 5) இந்தியாவுக்கு வந்தார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிக்கை தாக்கல் செய்து விளக்கம் அளித்தார்.
வங்கதேசம் விவகாரம் தொடர்பாக முதலில் மாநிலங்களவையில் விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், பின்னர் மக்களவையிலும் விளக்கம் அளித்தார்.
மக்களவையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
”வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குறுகிய கால அனுமதிக்கு பிறகு திங்கள்கிழமை மாலை இந்தியா வந்தார்.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஊரடங்கு உத்தரவை மீறி டாக்காவில் போராட்டக்காரர்கள் குவிந்த நிலையில், பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனைக்குப் பிறகு ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யும் முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.
வங்கதேசத்தில் வாழும் சிறுபான்மையினரையும் மத்திய அரசு தீவரமாகக் கண்காணித்து வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.