
பிரதமர் ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்த நிலையில், வங்கதேச நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்த நாட்டு அதிபர் முகம்மது ஷஹாபுதீன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
வங்கதேசத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட தொடர் வன்முறையையடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
தலைநகர் டாக்காவில் இருந்து ராணுவ விமானம் மூலமாக நேற்று(ஆக. 5) மாலை தில்லி வந்தடைந்தார். தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அவர் லண்டன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாகவும் வங்கதேச ராணுவம் அங்கு இடைக்கால அரசு அமைக்க உள்ளதாகவும் ராணுவத் தளபதி நேற்று அறிவித்தார்.
தொடர்ந்து, ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்த நிலையில் வங்கதேச நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்த நாட்டு அதிபர் முகம்மது ஷஹாபுதீன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'முப்படைகளின் தளபதிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்புகள், மாணவர் இயக்கத்தின் தலைவர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்த பிறகு நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவு எடுக்கப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை அந்த நாட்டில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியாவும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து ராணுவம் அங்கு இடைக்கால அரசு அமைக்கும் என்று கூறப்படும் நிலையில், ராணுவ அரசை ஏற்க மாட்டோம் என்று மாணவர் அமைப்புகள் கூறியுள்ளன.
இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகம்மது யூனுஸ் தலைமை ஏற்க வேண்டும் என கோரியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.