
100 கிராமில் 20 ஆண்டுகால உழைப்பு வீணாகியுள்ளதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் சகோதரி சங்கீத போகத் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் தொடரின் இறுதிப்போட்டிக்கு வினேஷ் போகத் தகுதி பெற்றிருந்த நிலையில், இறுதிப்போட்டியில் கூடுதலாக 100 கிராம் உடல் எடையுடன் இருந்ததற்காக அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு உலகம் முழுவதுமுள்ள விளையாட்டு வீரர்கள், தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2024 ஒலிம்பிக் தொடரின் பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதி, அரையிறுதி, என அடுத்தடுத்த சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.
ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்குச் சென்ற இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார் வினேஷ் போகத். அவர் 52 கிலோ எடையில் இருந்ததால், இறுதிப் போட்டிக்காக 2 கிலோ எடையைக் குறைக்க வேண்டியதாயிற்று. அதுவும் ஒரே இரவில்.
இறுதிப் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க இரவு முழுவதும் கடுமையாக உடற்பயிற்சி செய்து 1.9 கிலோ எடையைக் குறைத்துள்ளார். 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் இறுதிப்போட்டியில் தகுதிநீக்கம் செய்தது ஒலிம்பிக் குழு.
ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட எடையில் போட்டியாளர்கள் பங்கேற்க வேண்டும் என்பது விதிமுறை.
100 கிராம் எடைக்காக வினேஷ் போகத்திற்கு அனுமதி அளித்தால் மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என சர்வதேச மல்யுத்த சங்கமும் விளக்கம் அளித்துள்ளது.
மல்யுத்த வீராங்கனைகளால், பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரஜ் பூஷணுக்கு எதிராக வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தில்லி சாலையில் பல நாள்கள் உணவின்றி போராடினார்.
தற்போது களத்தில் இந்தியாவுக்காக போராடி இறுதிப்போட்டி வரை சென்றவருக்கு, தகுதி நீக்கம் பரிசாக கிடைத்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள வினேஷ் போகத்தின் சகோதரி சங்கீதா போகத்,
''வினேஷ், இது பெண்கள் அனைவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட இழப்பு. இந்த செய்தியை யாரும் நம்ப விரும்ப மாட்டார்கள். என்ன எழுதுவது என்று புரியவில்லை.
20 ஆண்டுகால கடின உழைப்பு இறுதியாக 100 கிராமில் வீணாகியுள்ளது. இதிலிருந்து மீள்வது எப்படி என்று தெரியவில்லை.
இந்தப் பதக்கம் எங்கள் அனைவருக்கும் சொந்தமானது. இது காலத்தின் கொடுமையா? என்று தெரியவில்லை. இந்தக் கொடுமைக்கு மத்தியில் ஒரு உண்மையான மற்றும் நியாயமான தீர்வு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.