
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் இரவு முழுக்க கூடுதலாக இருந்த 2 கிலோ எடையைக் குறைக்க கடும் பயிற்சி செய்தும் பலனளிக்கவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் மகளிருக்கான மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் களம்கண்ட வினேஷ் போகத், செவ்வாய் இரவு 2 கிலோ கூடுதல் எடையுடன் இருந்துள்ளார். இரவு முழுக்க கடும் பயிற்சி மேற்கொண்டதால் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் கியூபாவின் கஸ்மன் லோபஸ் யுஸ்னெலிஸை 5-0 என முற்றிலுமாக வீழ்த்தி இறுதிக்குத் தகுதி பெற்று, சாதனை படைத்திருந்தார்.
50 கிலோ எடைப்பிரிவில் விளையாட வேண்டிய வினேஷ் போகத், செவ்வாய்க்கிழமை இரவு 2 கிலோ கூடுதல் எடையுடன் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விளையாட வேண்டிய நாள்களில், அவர் 50 கிலோவுக்கு கூடுதல் எடையுடன் இருக்கக் கூடாது என்பது விளையாட்டு விதிமுறை.
எனவே, செவ்வாய்க்கிழமை இரவு முதல் வினேஷ் போகத், தொடர் ஓட்டம், ஸ்கிப்பிங், சைக்கிளிங் என அனைத்துக் கடுமையான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.
தொடர் பயிற்சியால் ஒரே இரவில் 1.85 கிலோ எடையைக் குறைத்த அவரால் 100 கிராமை குறைக்க முடியாமல் போயிருக்கிறது. அவரால் குறைக்க முடியாமல் போன அந்த 100 கிராம் உடல் எடையானது, அவரை இன்று ஒலிம்பிக் பதக்கம் எனும் கனவை நனவாக்க விடாமல் தடுத்து, தகுதி நீக்கம் செய்யக் காரணமாக அமைந்துவிட்டது.
இந்திய ஒலிம்பிக் குழுவினர், வினேஷ் போகத் தனது உடல் எடையைக் குறைக்க கூடுதல் நேரம் கேட்டும், அது பாரீஸ் ஒலிம்பிக் அமைப்பினால் மறுக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்நாள் முழுவதும் காத்திருந்த ஒலிம்பிக் பதக்கம் கையில் கிடைக்காமல் போனது.
இந்த சூழ்நிலை, வினேஷ் போகத்துக்கு புதிது ஒன்றும் இல்லை. அவர் வழக்கமாக 53 கிலோ எடைப்பிரிவில்தான் போட்டியிடுவார். ஏற்கனவே, இதுபோல 50 கிலோ எடைப்பிரிவில் போட்டியிடும்போது அவருக்கு இந்த கூடுதல் உடல் எடை சிக்கலாக மாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை வினேஷ் போகத் படைத்திருந்தார். இவர் அமெரிக்க வீராங்கனையை இறுதிப் போட்டியில் சந்திக்கவிருந்த நிலையில்தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால், போட்டி நடத்தப்படாமலேயே அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும். பதக்கம் ஏதுமின்றி வினேஷ் போகத் போட்டியிலிருந்து வெளியேறுகிறார்.
இந்த நிலையில்தான், இரவு முழுக்க தீவிர பயிற்சி மேற்கொண்டதால், நீர்ச்சத்து குறைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இரவு முழுக்க உடற்பயிற்சி செய்வது வீராங்கனைக்கு புதிதல்ல என்றாலும் பதக்கம் பறிபோனதே அவரது சக்தியை உலுக்கியிருக்கும் என்று இந்திய ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ள
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.