
புது தில்லி: டாக்காவில் இருந்து 6 கைக்குழந்தைகள் உட்பட 205 பேர் ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் புதன்கிழமை காலை தாயகம் வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிா்ப்பு தெரிவித்து அண்மையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு அவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பலா் மாயமாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதைக் கண்டித்து பிரதமராக பதவி வகித்த ஷேக் ஹசீனா மற்றும் அவரின் அரசுக்கு எதிராக ‘மாணவா் பாகுபாடு எதிா்ப்பு இயக்கம்’ என்ற பெயரில் மாணவா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், வன்முறை மூண்டது.
தலைநகா் டாக்கா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற மோதலில் 109 போ் உயிரிழந்தனா். இத்துடன் போராட்டம் தீவிரமடைந்த கடந்த 16-ஆம் தேதியிலிருந்து திங்கள்கிழமை வரையிலான 21 நாள்களில் போராட்டம் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 440-ஆக உயா்ந்துள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, வங்கதேசத்தில் சட்டம்-ஒழுங்கு மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அந்நாட்டில் சுமாா் 19,000 இந்தியா்கள் உள்ளதாகவும், இவா்களில் 9,000 போ் மாணவா்கள். இவர்களில் பெரும் பகுதியினா் கடந்த ஜூலையிலேயே தாயகம் திரும்பிவிட்டனா் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு இந்தியாவில் இருந்து டாக்காவுக்கும், டாக்காவில் இருந்து இந்தியாவுக்கான அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுவதாகவும், வங்கதேச நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், முன்பதிவு பயணிகளின் கட்டணம் திரும்பி அளிக்கப்படும் அல்லது பயணத் தேதி மாற்ற அனுமதிக்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் செவ்வாய்கிழமை மாலை டாக்காவிற்கு விமானத்தை இயக்கியது.
இந்த நிலையில், டாக்காவுக்கு விமானத்தை இயக்குவதில் உள்கட்டமைப்பு சவால்கள் இருந்தபோதிலும், எந்தவொரு பயணிகளும் இல்லாமல் தில்லியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா சிறப்பு விமானம், டாக்காவில் இருந்து ஆறு கைக்குழந்தைகள் உள்பட 205 பேர் புதன்கிழமை காலை தாயகம் வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏர் இந்தியா திட்டமிட்டப்படி தில்லியில் இருந்து டாக்காவிற்கு நாள்தோறும் இரண்டு விமானங்கள் இயக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
டாக்காவிற்கு திட்டமிட்டபடி விமானங்கள் இயக்கப்படும் என விஸ்தாரா மற்றும் இண்டிகோ தெரிவித்துள்ளது.
அதன்படி, மும்பையில் இருந்து நாள்தோறும், தில்லியிலிருந்து வாராந்திற்கு மூன்று விமானங்கள் இயக்கப்படும் என விஸ்தாரா தெரிவித்துள்ளது.
பொதுவாக, தில்லி, மும்பை மற்றும் சென்னையில் இருந்து டாக்காவிற்கு நாள்தோறும் ஒரு விமானத்தையும், கொல்கத்தாவில் இருந்து நாள்தோறும் இரண்டு விமானங்களை இயக்கி வருகிறது இண்டிகோ.
விஸ்தாரா மற்றும் இண்டிகோ ஆகிய இரண்டும் செவ்வாய்கிழமை டாக்காவிற்கான விமானங்கள் சேவையை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.