
புதுதில்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு கடந்த மாதம் வழங்கப்பட்ட சுனேரி பாக் சாலையில் உள்ள 5 -ஆம் எண் வீட்டில் குடியேறுவதற்கு முன்வந்ததை அடுத்து, அவருக்கு வீடு ஒதுக்கீடு கடிதம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதையடுத்து வீடு புதுப்பித்தல் மற்றும் அலுவலகம் போன்ற அவரது தேவைகளுக்கு ஏற்ப வசதிகள் செய்துதரப்பட்டவுடன் மூன்று மாதங்களில் ராகுல் அங்கு குடியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கடந்த 2019-ஆம் ஆண்டு கா்நாடகத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ‘மோடி’ சமூக மக்களை தவறாக சித்தரித்துப் பேசியதாக அவா் மீது பாஜகவை சோ்ந்த பூா்ணேஷ் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து துக்ளக் லேனில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு தனது தாய் சோனியா காந்தியின் ஜன்பத் 10 -இல் உள்ள வீட்டில் தங்கினார்.
இந்தத் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தாா். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராகுல் காந்தியின் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் மக்களவைச் செயலகம் ராகுல் காந்திக்கு மீண்டும் மக்களவை உறுப்பினர் பதவியை வழங்கியதை அடுத்து மீண்டும் துக்ளக் லேன் வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனாலும் அவர் அந்த வீட்டில் குடியேறவில்லை.
இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த 2023 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய கூட்டணி அரசு அமைந்தது.
மோடி தலைமையிலான புதிய அரசில் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி பொறுப்பேற்றார். இதையடுத்து மத்திய அமைச்சர் அந்தஸ்து கொண்ட பதவி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பதால், அவருக்கு கூடுதல் வசதிகள் கொண்ட வீடு அவருக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
எனவே, சுனேரி பாக் சாலையில் உள்ள 5-ஆம் எண் வீட்டை ராகுல் காந்திக்கு ஒதுக்க மத்திய அரசு முன்வந்தது. அதை உறுதிசெய்யும் வகையில் ராகுல் காந்தியின் சகோதரியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா அந்த வீட்டை பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து ராகுல் காந்தி சுனேரி பாக் சாலையில் உள்ள 5 -ஆம் எண் வீட்டில் குடியேறுவதற்கு முன்வந்ததை அடுத்து, அவருக்கு அந்த வீட்டின் ஒதுக்கீடு கடிதம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த வீட்டை புதுப்பித்தல் மற்றும் அலுவலகம் போன்று அவரது தேவைகளுக்கு ஏற்ப வசதிகள் செய்துதரப்பட்டவுடன் அடுத்த மூன்று மாதங்களில் ராகுல் அந்த வீட்டிற்கு குடியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் ஏற்கனவே தங்கிருந்த வீடுகளே ஒதுக்கீடு செய்யயப்பட்டுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கு லுடியன்ஸ் பகுதியில் தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
தில்லியின் மூத்த மக்களவை உறுப்பினர்கள் நான்கு பேருக்கு அவர்கள் முன்பு தங்கியிருந்த வீடுகளே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தில்லி மக்களவை உறுப்பினர் பன்சூரி ஸ்வராஜுக்கு, முன்னாள் மாநில அமைச்சர் மீனாட்சி லேகி வசித்து வந்த மகாதேவ் சாலையில் உள்ள 14-ஆம் எண் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு தில்லி மக்களவை உறுப்பினர் கமல்ஜீத் செஹ்ராவத், பர்வேஷ் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லமாக செயல்பட்ட வின்ட்சர் அரண்மனையில் உள்ள 20 -ஆம் எண் வீட்டை ஒதுக்குமாறு கோரியிருந்தார். அவரது கோரிக்கை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு தில்லி மக்களவை உறுப்பினர் ராம்வீர் சிங் பிதுரி மற்றும் வடகிழக்கு தில்லி மக்களவை உறுப்பினர் மனோஜ் திவாரி ஆகியோர் தற்போது இருந்து வரும் வீடுகளிலேயே இருப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். தில்லி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்ததால் பிதுரிக்கு ஜாகீர் உசேன் மார்க்கில் வீடு வழங்கப்பட்டது. அவர் வேறு இடத்திற்கு மாற விருப்பமில்லாததால், அதே வீட்டையே ஒதுக்குமாறு தனது விருப்பத்தை கமிட்டிக்கு தெரிவித்துள்ளார். கிழக்கு தில்லி மக்களவை உறுப்பினர் ஹர்ஷ்தீப் மல்ஹோத்ரா மாநில அமைச்சராக இருப்பதால் அவருக்கு ஜன்பத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.