மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி காலமானார்
கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி வியாழக்கிழமை கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் காலமானார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீம் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்த இடது முன்னணி ஆட்சியின் போது, பட்டாச்சார்ஜி இரண்டாவது மற்றும் கடைசி சிபிஎம் முதல்வராக இருந்தார். சிபிஐ(எம்) தலைவரான அவர் 2000 முதல் 2011 வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி (80) வியாழக்கிழமை கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் காலமானார் .
இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீம் உறுதி செய்தார்.
80 வயதான புத்ததேவ் பட்டாச்சார்ஜிக்கு மீரா என்ற மனைவியும், சுசேதனா என்ற மகளும் உள்ளனர்.
பட்டாச்சார்ஜி மறைவுக்கு மேற்கு வங்க அரசியல் தலைவர்கள், தேசிய அரசியல் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1944 இல் வடக்கு கொல்கத்தாவில் ஒரு பெங்காலி பிராமண குடும்பத்தில் பிறந்த புத்ததேவ் பட்டாச்சார்ஜி 1966 இல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
50 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் வாழ்க்கையில், அவர் தனது ஆட்சியின் போது சிபிஐ(எம்) மூத்த தலைவர்களில் ஒருவரானார்.
சிபிஐ(எம்) நிதிக் கொள்கைகள் முதன்மையாக முதலாளித்துவத்திற்கு எதிரானது என்பதற்கு மாறாக, வணிகம் தொடர்பான ஒப்பீட்டளவில் வெளிப்படையான கொள்கைகளுக்காக பட்டாச்சார்ஜி அறியப்பட்டார். ஆனால்
அவர் முதல்வராக இருந்த காலத்தில் கடுமையான நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்புகளையும் போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை குறித்த குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டார். இது 2011 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பட்டாச்சார்ஜிக்கு தோல்வியை பெற்று தந்தது.
இதன் விளைவாக உலகில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்கமான மேற்கு வங்கத்தில் இடது முன்னணியின் 34 ஆண்டுகால ஆட்சி வீழ்ச்சியடைந்தது.
பட்டாச்சார்ஜி தனது சிக்கனமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவர். ஒரு பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், பட்டாச்சார்ஜி கம்யூனிசத்தின் கொள்கைகளின்படி ஓர் உறுதியான நாத்திகர் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.