
மதுரையில் பூ சந்தைக்கு வரத்துக்குறைவால் புதன்கிழமை ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ஆடி மாதத்தில் கோயில் திருவிழாக்கள் நீங்கலாக, பிற சுபநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறுவதில்லை. இதனால் வெள்ளிக்கிழமை பூஜைகளுக்காக வியாழக்கிழமை மட்டுமே பூக்களின் தேவை அதிகரித்து வந்தது. பிற நாள்களில் பூக்களுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த வாரம் ஆடி 18 என அழைக்கப்படும் ஆடிப் பெருக்கு திருவிழாவுக்காக மதுரை பூ சந்தையில் பூக்களில் விலை சற்று உயர்ந்தது. பின்னர் அடுத்தடுத்த நாள்களில் குறைந்து விற்பனையானது.
இந்த நிலையில், மதுரை பூ சந்தைக்கு மல்லிகைப் பூ வரத்துக்குறைந்ததால் மல்லிகைப் பூ விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.1,500 வரை விற்பனையாகிறது. இந்த விலை உயா்வால் மல்லிகைப்பூ பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
ஆடி வெள்ளி, ஆவணி மாதம் தொடக்கம் மற்றும் முகூர்த்த நாள்கள் வரவுள்ள நிலையில் வரும் நாள்களில் பூக்களின் தேவை அதிகரிக்கும் என்பதால், பூக்களின் விலை இன்னும் உயரும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.