கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகள், பலவீனமான சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட 10 சதவீதத்துக்கு அதிகமான மழைப்பொழிவால் இந்த பேரழிவுகள் ஏற்பட்டதாக உலகளாவிய விஞ்ஞானிகள் குழுவினர் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
வயநாட்டில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உருக்குலைந்தன. வீடுகள் புதையுண்டதோடு, பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. பலத்த உயிா்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்த நிலச்சரிவு, கேரளத்தின் மிக மோசமான இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், இதுவரை 231 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 178 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 51 பேர் அடையாளம் காணப்படவில்லை. இதுவரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் 205 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும், மீட்புக்குழுக்கள் தொடர் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
பருவமழையின் போக்குகள் தற்போது ஒழுங்கற்றதாக மாறி, குறுகிய காலத்தில் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது. முன்பெல்லாம் பருவமழையின்போது ஒரு சீரான மழைப்பொழிவு இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் பருவமழைக்கு முந்தைய மழையின் தன்மையோடு இடி மின்னலோடு கூடிய கனமழை பொழிவதே பருவமழையின் போக்குகளாக இருந்து வருகின்றன.
அதிக நிலச்சரிவால் பேரழிவைக் கண்டுள்ள கேரளத்தில் பல காலங்களாகவே பருவமழைக்கான தன்மையோடு மழை பொழிவதில்லை.
அதேபோல் பலத்த மழைப்பொழிந்தாலும் அதன் சராசரி மழைப்பொழிவின் அளவை இதுவரை மிஞ்சவில்லை. ஆனால் காற்று மற்றும் கடல் வெப்பநிலை அதிகரிப்பால், ஈரப்பதம் கடுமையாக அதிகரித்துள்ளதை உணரமுடிகிறது.
இந்த நிலையில், இந்தியா, ஸ்வீடன், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 பேர் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழுவினர், வயநாடு நிலச்சரிவுக்கான காரணம் குறிந்து நடத்திய ஆய்வில், பலவீனமான சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட 10 சதவீதத்துக்கு அதிகமான மழைப்பொழிவே இந்த மோசமான பேரழிவுக்கான காரணம் என தெரியவந்துள்ளது.
இரண்டு மாதமாக பொழிந்த பருவமழையில் ஒரே நாளில் 140 மி.மீ.க்கும் அதிகமான மழைப்பொழிவால் ஏற்பட்ட மோசமான நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் குறைந்தது 231-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
"மாநிலத்திலேயே அதிக நிலச்சரிவு அபாயம் உள்ள வயநாட்டின் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதற்கு அங்கு பெய்த தொடர் அதிக மழைப்பொழிவே காரணம்.
காலநிலை வெப்பமடைவதால் இன்னும் பலத்த மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது வட கேரளத்தில் இதேபோன்ற நிலச்சரிவுகளுக்கு தயாராக வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகக" செஞ்சிலுவைச் சங்கத்தின் செஞ்சிலுவைச் சங்க காலநிலை ஆலோசகர் மஜா வால்பெர்க் கூறியுள்ளார்.
நிலச்சரிவுகள் வறட்சி, புயல் அல்லது வெள்ளம் போன்றவை பேரழிவுகளாக கருதப்படவில்லை. அவை உள்ளூர்மயமாக்கப்பட்ட நிகழ்வுகள் என்பதால் அவை குறைவாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் தீவிரமடைவதால் அவற்றின் அதிர்வெண்கள் அதிகரித்து வருவதால் அவை குறிப்பிடத்தக்க உயிர் மற்றும் வாழ்வாதார இழப்புகளை ஏற்படுத்துகின்றன.
உண்மையில், இரண்டு வாரங்கள் தொடர்ந்து பெய்த மழைப்பொழிவு மற்றும் இந்த நேரத்தில் இயல்பை விட 50-70 சதவீதம் அதிகமான மழைப்பெழிவே வயநாட்டில் பேரழிவுக்கான நிலையை ஏற்படுத்தியது. இந்த மழையானது மேல்மண்ணை நிரம்பச் செய்தது, மேலும் ஒரு நாள் மிகக் கடுமையான மழைப் பொழிவானது ஒரு சிறிய மேக வெடிப்பைப் போன்றவை நிலச்சரிவு நிகழ்வைத் தூண்டியது.
உலக வானிலை பண்புக்கூறு குழுவின் விஞ்ஞானிகள் கூறுகையில், மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை அளவிட, ஒப்பீட்டளவில் சிறிய ஆய்வுப் பகுதியில் மழைப்பொழிவை துல்லியமாக பிரதிபலிக்கும் அளவுக்கு உயர் தெளிவுத்திறனுடன் காலநிலை மாதிரிகளை ஆய்வு செய்தனர்.
பருவநிலை மாற்றம் காரணமாக மழையின் தீவிரம் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
1850 - 1900 சராசரியுடன் ஒப்பிடும்போது, சராசரி உலக வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் உயர்ந்தால், மழையின் தீவிரம் மேலும் நான்கு சதவீதம் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கணித்துள்ளன.
இருப்பினும், ஆய்வுப் பகுதி சிறியதாகவும், சிக்கலான மழைப்பொழிவு-காலநிலை இயக்கவியலுடன் மலைப்பகுதியாகவும் இருப்பதால், மாதிரி ஆய்வுகளின் முடிவில் "உயர்நிலை நிச்சயமற்ற தன்மை" இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாள் மழைப்பொழிவுகளின் அதிகரிப்பு, இந்தியா உட்பட வெப்பமயமாதல் உலகில் அதிக மழைப்பொழிவு பற்றிய வளர்ந்து வரும் அறிவியல் சான்றுகளுடன் ஒத்துப்போகிறது, மேலும் வெப்பமான வளிமண்டலம் அதிக ஈரப்பதத்தைக் கொண்டுள்ளது, இது அதிக மழைப்பொழிவுக்கு வழிவகுக்கிறது.
விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, உலக வெப்பநிலையில் ஒவ்வொரு ஒரு டிகிரி செல்சியஸ் உயர்வுக்கும் வளிமண்டலத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கான திறன் சுமார் 7 சதவீதம் அதிகரிக்கிறது.
பூமியின் உலக மேற்பரப்பின் வெப்பநிலை ஏற்கனவே சுமார் 1 சதவீதம் அதிகரித்துள்ளது.
பசுமை வாயுக்கள், முதன்மையாக கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் ஆகியவற்றின் செறிவு வேகமாக 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
உலம் முழுவதும் வறட்சி, வெப்ப அலைகள் மற்றும் வெள்ளம் போன்ற மோசமான வானிலை நிகழ்வுகளுக்கு இதுவே காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேலும் கேரளத்தில் தொடர் கனமழை பொழிவு காரணமாக மணல் மிருதுவாகி மணல் அரிப்பு ஏற்படுவது எளிமையாகிவிட்டது. மண்ணின் ஈரப்பதம் அதிகமாகி உச்சநிலையை அடையும்போது அவை தெவிட்டு மண்ணாகிக் கரைந்தோடுகிறது.
நிலமைகள் இப்படியிருக்க, வயநாட்டில் நிலப்பரப்பு, நிலப்பரப்பு மாற்றங்கள் மற்றும் நிலச்சரிவு அபாயம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு தற்போதுள்ள ஆய்வுகளில் இருந்து முழுமையாகத் தெரியவில்லை, கட்டுமானப் பொருட்களுக்கான குவாரி மற்றும் 62 சதவீத காடுகளின் பரப்பளவு குறைப்பு, தொடர் மழை மற்றும் கனமழை போன்றவைகளே இதுபோன்ற நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பாகவும் இருந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (குசாட்) வளிமண்டல ரேடார் ஆராய்ச்சிக்கான மேம்பட்ட மையத்தின் இயக்குநர் எஸ். அபிலாஷ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், அரபிக்கடலின் வெப்பமயமாதல் ஆழமான மேக அமைப்புகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கிறது, இதன் விளைவாக மிக அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது, இதன் விளைவாக உள்ளூர் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. கேரளத்தில் சமீப காலமாக நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.
"தென்கிழக்கு அரபிக் கடல் வெப்பமடைந்து வருவதாக எங்கள் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது, இதனால் கேரளம் உள்பட இந்த பகுதிக்கு மேலே உள்ள வளிமண்டலம் வெப்ப இயக்கவியல் ரீதியாக நிலையற்றதாக மாறுகிறது. இந்த உறுதியற்ற தன்மை ஆழமான மேகங்களை உருவாக்க அனுமதிக்கிறது," என்று அவர் கூறினார்.
மேலும் "2019 கேரளம் வெள்ளத்தின் போது காணப்பட்டதைப் போலவே மேகங்கள் மிகவும் ஆழமாக இருந்தன." தென்கிழக்கு அரபிக் கடலில் மிக ஆழமான மேக அமைப்புகள் உருவாகும் போக்கை விஞ்ஞானிகள் கவனித்துள்ளதாகவும், சில சமயங்களில் இந்த அமைப்புகள் 2019 ஆம் ஆண்டைப் போல நிலத்திற்குள் ஊடுருவுவதாகவும் அபிலாஷ் கூறினார்.
கடந்த ஆண்டு இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் வெளியிட்ட நிலச்சரிவு அட்லஸ் படி, இந்தியாவில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய முதல் 30 மாவட்டங்களில் 10 கேரளத்தில் உள்ளன, அதில் வயநாடு 13 ஆவது வது இடத்தில் உள்ளது.
அதாவது தமிழகம், கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளடக்கிய பகுதிகள் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவை. குறிப்பாகக் கேரளத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நிலவும் மக்கள் தொகை அடர்த்தியால் நிலச்சரிவுக்கு அதிக அபாயம் உள்ள பகுதியாக அதை மாற்றுகிறது என தெரிவித்திருந்தது.
இந்திய வெப்பமண்டல வானியல் ஆய்வு நிறுவத்தின் காலநிலை விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கால் கூறுகையில், “கேரளம் மாநிலத்தில் உள்ள சரிபாதி மலைகள் மற்றும் குன்றுகளினால் ஆனது. இந்த பகுதிகளில் உள்ள மலைச்சரிவு 20 டிகிரி வரை செங்குத்தாக இருப்பதால் கனமழை பெய்தால் நிலச்சரிவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதுபோன்ற சூழலில், ‘சூழலியல் உணர்திறன் மிகுந்த மண்டலங்கள்’ அடையாளம் காணப்பட்டு அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு அந்த பகுதி வாழ் மக்களுக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட வேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் முன்னறிவிப்பை வழங்கினால் பல உயிர்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் நிச்சயம் பாதுகாக்க முடியும். இதுதவிர பருவநிலை மாற்றமும், மனிதர்களின் இயற்கைக்கு புறம்பான செயல்பாடுகளும் இதுபோன்ற அதிபயங்கரமான நிலச்சரிவு ஏற்பட முக்கிய காரணிகள் என்பதை மறுப்பதற்கில்லை.
பொதுவாக, பருவமழையின் முறைகள் தற்போது ஒழுங்கற்றதாக மாறி, குறுகிய காலத்தில் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது. இதன் விளைவாக, கேரளம் முதல் மகாராஷ்டிரம் வரை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அடிக்கடி நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படுகின்றன என்று மேத்யூ கால் கூறினார்.
ஸ்பிரிங்கர் 2021 இல் வெளியிட்ட ஒரு ஆய்வில், கேரளாவில் நிலச்சரிவு ஏற்படும் இடங்கள் அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருப்பதாகவும், அவை இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக அதிகமான நிலச்சரிவுகள் ஏர்படும் அபாயமான பகுதிகளாக இருப்பதாக கூறியுள்ளது.
கேரளத்தில் ஏற்பட்ட மொத்த நிலச்சரிவில் 59 சதவீதம் தோட்டப் பகுதிகளில் ஏற்பட்டதாக அது கூறியுள்ளது.
வயநாட்டில் காடுகளின் பரப்பைக் குறைப்பது குறித்த 2022 ஆம் ஆண்டு ஆய்வில், 1950 மற்றும் 2018 வரை வயநாடு மாவட்டத்தில் 62 சதவீதம் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் தோட்டப் பயிர்கள் பரப்பு சுமார் 1,800 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகள் அனைத்துமே காலநிலை மாற்றம், வலுவிழந்த நிலப்பரப்பு, குறைந்து வரும் வனப்பரப்பு ஆகியவையே வயநாட்டின் வரலாறு காணாத நிலச்சரிவுக்கான காரணங்களாக அமைந்துள்ளன என்பதை தெளிவாக எடுத்துக் கூறுகின்றன.
எனவே, வணிக நோக்கத்துக்காக பூமியின் அடி ஆழம்வரை வேர் பரப்பி மண்ணை காத்து வந்த காட்டு மரங்களை வெட்டுவதை தவிர்த்துவிட்டு, வேகமாக மாற்றம் கண்டு வரும் காலநிலை பருவமழையின் போக்குக்கு ஏற்றார் போன்று பாரம்பரிய காட்டு மரங்களை நாடுவது, தற்காலிகமாக ஏற்பட்டு வரும் இயற்கைப் பேரிடர்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஒவ்வொரு பகுதியில் அந்த புவித் தன்மைக்கேற்ப அந்த பகுதிகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு திட்டமிடல் வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.
அரசு வளர்ச்சிக்காக நாடு முழுவதும் ஏராளமான காடுகள், மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. 1920-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை கேரளம் மாநிலம் மேற்குத் தொடர்ச்சி மலையில் மிக அதிகபட்சமாக 62.7 சதவீகிதம் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதை என்பதை உணர்ந்து அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் இதுபோன்ற இயற்கை பேரிடர்களுக்கு காலநிலை மாற்றத்தின் மீது பழிபோடுவதை நிறுத்திக்கொள்ள முடியும்.