
சென்னை: சுதந்திர நாள் விழா மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதன் எதிரொலியாக உள்நாட்டு விமானங்களுக்கான விமான கட்டணங்கள் பல மடங்காக உயர்ந்துள்ளன.
நாடு முழுவதும் சுதந்திர நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. சனி, ஞாயிறு தொடா் விடுமுறை ஒருபுறமிருக்க வியாழக்கிழமை சுதந்திர நாள் விடுமுறை என்பதால் பல நிறுவனங்கள் வெள்ளிக்கிழமையுடன் 4 நாள்கள் தொடா் விடுமுறை அறிவித்துள்ளன.
இதையடுத்து சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் வெளியூா்வாசிகள், குறிப்பாக தென் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள், புதன்கிழமை மாலை முதல் தங்கள் சொந்த ஊா்களுக்குப் புறப்பட்டனா்.
இதற்காக தமிழக அரசு தரப்பில் சிறப்புப் பேருந்துகளும், ரயில்வே தரப்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது.
பேருந்துகள், ரயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால், ஏராளமானோா் வியாழக்கிழமை விமானம் மூலம் தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டு சென்றனா்.
இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது. சென்னையிலிருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் மற்றும் திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இதனால், விமான பயணக் கட்டணமும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், கோவை செல்லும் விமானங்களுக்கான கட்டணம் பல மடங்கு அதிகரித்து விற்பனையாகி வருகின்றது.
இதன்படி, வழக்கமாக மதுரைக்கு ரூ.4,063 வரை விற்பனை செய்யப்படும் விமான பயணச்சீட்டு தற்போது ரூ.11,716 வரை விற்பனையாகிறது. இதேபோன்று சென்னை-தூத்துக்குடிக்கு ரூ.4,301 இல் இருந்து ரூ.10,796 ஆகவும், சென்னை - திருச்சிக்கு ரூ.2,382 இல் இருந்து ரூ.7,192 ஆகவும், சென்னை-கோவைக்கு ரூ.3,369 இல் இருந்து ரூ.5,349 ஆகவும், சென்னை-சேலத்துக்கு ரூ.2,715 இல் இருந்து ரூ.8,277 ஆகவும் உயர்ந்துள்ளது.
விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்த்தப்பட்டாலும், அதையும் பொருட்படுத்தாமல் தங்கள் சொந்த ஊா்களுக்கு ஏராளமானோா் புறப்பட்டு சென்றனா்.
இதுபோன்ற நாள்களில் பயணிகளின் வருகைக்கு ஏற்ப கட்டணங்கள் உயா்த்தப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றும், பயணச்சீட்டு கட்டணம் உயா்த்தப்பட்டாலும், குறிப்பிட்ட நாள்களில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டன என்று விமான நிலைய பயணச்சீட்டு முன்பதிவு மையத்தினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.