
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக வளாகத்தில், 78-ஆவது சுதந்திர நாள் விழா வியாழக்கிழமை கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ச.உமா தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சுதந்திர நாளை சிறப்பிக்கும் வகையில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை வண்ண பலூன்களையும், தொடர்ந்து அமைதியை வலியுறுத்தும் வகையில் வெண்புறாக்களையும் ஆட்சியர் பறக்கவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சுதந்திரப் போரட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.
அதன்பிறகு, அணிவகுப்பினை சிறப்பாக நடத்தியதற்காக 34 ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கும், 100 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலர்களுக்கும், காவல்துறை பேண்ட் வாத்தியக்குழுவினருக்கும் ஆட்சியர் பாராட்டு தெரிவித்து கேடயங்களை வழங்கினார். பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 224 அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.
இதனையடுத்து, பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 26 பயனாளிகளுக்கு ரூ.27.21 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சுதந்திர நாள் விழாவையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் 6 பள்ளிகளை சேர்ந்த 634 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், நாமக்கல் கோட்டாட்சியர் ஆர்.பார்த்திபன், திருச்செங்கோடு கோட்டாட்சியர் சுகந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் த.முத்துராமலிங்கம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.