
சென்னை: வயநாடு சம்பவத்தின் எதிரொலியாக, தமிழக மலைப் பகுதிகளில் இயற்கை இடா்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
78 ஆவது சுதந்திர நாளையொட்டி தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை உரையாற்றினாா்.
அப்போது, சமீப காலமாக, நாம் பெரிதும் எதிர்கொள்ளும் பிரச்னையாக காலநிலை மாற்றம் உருவாகியுள்ளது. காலை நிலை மாற்றப் பிரச்னையால் இயற்கைச் சீற்ற பாதிப்புகள் உண்டாகின்றன. அண்மையில் கூட, நமது சகோதர மாநிலமான கேரளத்தில் பெய்த பெருமழை காரணமாக வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளில் இருந்து கேரளம் மீள்வதற்கான அனைத்து உதவிகளையும் வழங்கியுள்ளோம்.
தமிழ்நாட்டிலும் நீலகிரி, வால்பாறை மலைப்பகுதி, கொடைக்கானல் போன்ற மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதிகள், ஏற்காடு, ஏலகிரியை உள்ளடக்கிய மலைப்பகுதிகள் என மலைநிலப் பகுதிகள் அதிகம் உள்ளன.
அங்குப் பெருமழைக் காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடா்பாடுகள் குறித்து முறையாக ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. வனத்துறை, புவிசார் அறிவியல் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட பல்துறை வல்லுநர்களைக் கொண்ட ஒரு குழுவினால், அறிவியல் அடிப்படையிலான ஒரு விரிவான ஆய்வு, மாநிலப் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலமாக இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும்.
மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இடர்பாடுகளை முன்னதாக அறிவதற்கும், தவிர்ப்பதற்கும், தணிப்பதற்கும், நீண்டகால அடிப்படையில் ஆபத்துகளைக் குறைப்பதற்கும் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்து, தனது பரிந்துரைகளை வழங்கும். அந்தப் பரிந்துரைகளின் மீது, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.