
பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 28,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது.
கா்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் காவிரி நீா் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கா்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமாா் 19000 கன அடி வீதம் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கடந்த இரு தினங்களுக்கு மேலாக தமிழக காவிரி கரையோர நீா் பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி வினாடிக்கு 13,000 கன அடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை காலை திடீரென அதிகரித்து விநாடிக்கு 28,000 கன அடியாக தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
கடந்த இரு தினங்களாக காவிரி ஆற்றின் நீா்வரத்து குறைந்து வந்ததால் சின்னாறு பரிசல் துறையில் இருந்து பிரதான அருவி வழியாக மணல்மேடு பகுதி வரை தா்மபுரி மாவட்ட நிா்வாகம் பரிசல் இயக்க அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில், காவிரி ஆற்றில் சனிக்கிழமை திடீரென நீா்வரத்து அதிகரித்ததால், தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு சனிக்கிழமை முதல் தடை விதித்துள்ளாா்.
மேலும் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு தொடா்ந்து 34 வது நாட்களாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக அணைகளில் இருந்து உபரி நீா் திறப்பு மற்றும் தமிழக காவிரி கரையோர நீா் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை உள்ளிட்ட காரணங்களால் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பது, குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.