
ராசிபுரம்: ராசிபுரம் மன நலம் காப்பகத்தில் தங்கி இருந்த இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் காட்டூர் சாலையில் அனைத்து கரங்கள் என்ற மனநலம் பாதிக்கப்பட்டுருக்கான மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.
அரசு அனுமதியுடன் நிதி உதவி பெற்று செயல்பட்டு வரும் இந்த மறுவாழ்வு மையத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை 67 மனநலம் பாதிக்கப்பட்டோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவர் மகன் எம். தங்கராஜ் (60) கடந்த ஐந்து ஆண்டுகளாக இல்லத்தில் தங்கியுள்ளார். இதேபோல் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த நைனா முகமது என்பவர் மகன் கைரூல் ஆஸ்மி (35) என்பவரும் தங்கி உள்ளார். இவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் தங்கராஜ் கம்பியால் கைரூல் ஆஸ்மியை தாக்கியதாகத் தெரிகிறது.
இதனையடுத்து, அங்கிருந்த கட்டையால், கைரூல் ஆஸ்மி தங்கராஜைத் தாக்கியுள்ளார். தலையில் பலமாக தாக்கியதில் தங்கராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மறுவாழ்வு மையத்தை நடத்தி வரும் ஜாய் ராசிபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் காவல் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
உயிரிழந்த தங்கராஜ் உடல் பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரைத் தாக்கிய கைரூல் ஆஸ்மி (35) இல்லத்திலேயே தங்க வைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.