
பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க நேற்று தடை விதித்திருந்த மாவட்ட நிர்வாகம் மீண்டும் பரிசல் இயக்க இன்று(ஆக. 18)அனுமதி அளித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சனிக்கிழமை திடீரென நீர்வரத்து விநாடிக்கு 28,000 கன அடியாக அதிகரித்ததால் பரிசல் இயக்க தடை விதித்த மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை காலை நீர்வரத்து விநாடிக்கு 17,000 கன அடியாக குறைந்ததால் மீண்டும் பரிசல் இயக்க அனுமதி அளித்துள்ளது.
காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு நேற்று தடை விதித்தும், இன்று(ஆக. 18) அனுமதி அளித்துள்ள நிலையில் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து சின்னாறு பரிசல் துறை வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகத்தின் முதன்மை சுற்றுலா தளமாக விளங்கும் ஒகேனக்கல் அருவி பகுதிக்கு நாள்தோறும் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருக்கும். ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக ஊட்டமலை பரிசல் துறை, மாமரத்துக்கடவு பரிசல் துறை, சின்னாறு பரிசல் துறை உள்ளிட்ட பரிசல் துறைகளில் நீர்வரத்தின் அளவை பொருத்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு பரிசல் இயக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகம் மற்றும் கேரளம் மாநிலங்களின் காவிரி நீர் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 19000 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், கடந்த இரு நாள்களுக்கு மேலாக தமிழக காவிரி கரையோர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சனிக்கிழமை நிலவரப்படி வினடிக்கு 28,000 கன அடியாக அதிகரித்தது.
இதனால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. தற்போது தமிழக காவிரி கரையோர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் செய்து வந்த மழையின் அளவு குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. சனிக்கிழமை மாலை நிலவரப்படி வினாடிக்கு 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென குறைந்து வினாடிக்கு 17,000 கன அடியாக தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றின் நீர்வரத்து குறைந்து வந்ததால் சின்னாறு பரிசல் துறையில் இருந்து பிரதான அருவி வழியாக மணல்மேடு பகுதி வரை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, மீண்டும் பரிசல்கள் இயக்க அனுமதி அளித்துள்ளார்.
காவிரி ஆற்றில் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை அல்லது நாளுக்கு நாள் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் பரிசல்கள் இயக்குவதற்கு திடீரென தடை விதித்தும்,பின்னர் அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாவதால் வார விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலாப் பயணிகள் புலம்பிய நிலைக்கு தள்ளப்பட்டு ஒகேனக்கல் வருவதை தவிர்க்கும் சூழல் நிலவுகிறது.
சனிக்கிழமை பரிசல் இயக்கத் தடை என அறிவிப்பு வெளியான நிலையில், ஞாயிற்றுக்கிழமை பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்படுவதாக தகவல் வெளியான போதிலும், வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையில் ஒகேனக்கல் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து சின்னாறு பரிசல் துறை சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும், ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு தொடர்ந்து 36-வது நாளாகத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு மற்றும் தமிழக காவிரி கரையோர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை உள்ளிட்ட காரணங்களால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பது, குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.