
சென்னை: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ககர்லா உஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு கட்டடங்கள், மனைப்பிரிவு திட்டங்களை ஒழுங்குப்படுத்துவதற்காக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகப் பதவி விகித்த கே.ஞானதேசிகன் பதவிக்காலம் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இதையடுத்து அந்த குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்த தமிழக அரசு, ஆளுநரின் ஒப்புதலை பெற்று, தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவை தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
ராஸ்தான் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட சிவ்தாஸ் மீனா, 1989 ஆம் ஆண்டு குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு பிரிவு அதிகாரியாத நியமிக்கப்பட்டார். காஞ்சிபுரம் உதவி ஆட்சியராக பணியைத் தொடங்கிய சிவ்தாஸ் மீனா,மத்திய, மாநில அரசின் பல்வேறு துறைகளில் 34 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாடு அரசின் 49 ஆவது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட இவரது பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது.
புதிய தலைமைச் செயலாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.