
சிவகங்கை: காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று சிஐடியு டாஸ்மாக் மாநில ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
சிவகங்கை சிவன்கோயில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் டாஸ்மாக் மாநில ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) மாநிலக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அச்சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலர் கே. திருச்செல்வன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்துகிறோம்.
அதே போல அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 60 -ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இது டாஸ்மாக் ஊழியர்களுக்கு பொருந்தாது என்று நிர்வாகம் கூறுகிறது. ஆகவே, டாஸ்மாக் ஊழியர்களுக்கும் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும்.
அதேபோல ,பள்ளத்தூரில் டாஸ்மாக் ஊழியர் படுகொலை செய்யப்பட்ட அர்ஜுனன் மனைவிக்கு இதுவரை அரசு வேலை வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட அந்தக்குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க அரசு முன் வரவேண்டும்.
கொலை செய்யப்பட்ட ஊழியர் அர்ஜுனன் மனைவிக்கு உடனடியாக வாரிசு அடிப்படையில் அரசு வேலை வழங்க அரசும், மாவட்ட நிர்வாகமும் மற்றும் டாஸ்மாக் நிர்வாகமும் முன் வர வேண்டும்.
அதே போல அரசு மருத்துவத் திட்டம் எங்களுக்கு முழுமையாக பலனளிக் காததால் எங்களை இஎஸ்ஐ திட்டத்தில் சேர்க்க வலியுறுத்துகிறோம். காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அரசு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் தொழிலாளர்களுக்கு வரும் நடை முறைப் பிரச்னைகளை கருத்தில் கொள்ளாமல் அமல்படுத்தப்பட்டிருப்பது சரியானதல்ல. ஊழியர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அந்தத்திட்டத்தை திரும்பப் பெறவேண்டும்.
இந்தக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் மட்டுமல்லாமல் டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள இதர தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம் என்றார் கே. திருச்செல்வன்.
இதில், மாநிலத்தலைவர் பொன்முடி, சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர். தெய்வராஜ், மாநில பொதுச் செயலர் ஜி.சந்திரன், சிவகங்கை மாவட்ட சிஐடியு செயலர் ஏ. சேதுராமன், சிவகங்கை மாவட்ட சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள் திருமாறன், குமார், பாண்டி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.