
சென்னை: கடந்த 3 ஆண்டுகளில் கோயில் நிலங்களை தமிழக அரசு மீட்பது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை பட்டியலிட்ட தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து அறநிலையத் துறையின் பொற்காலம் திமுக ஆட்சி என தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்று வரும் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' நிறைவு நாள் விழாவில் காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டு பேசியவர், பழனி முருகப்பெருமானின் ஆறு புனிதத் தலங்களில் ஒன்றாகும். இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு, முதல்வரின் வழிகாட்டுதலில் அறநிலையத்துறை அறத்தோடு தனது பணிகளை முன்னெடுத்து செல்கிறது.திமுக அரசு திடீரென்று இந்த மாநாட்டை நடத்துகிறது என்று இன்றைக்கு ஒரு சிலர் கேள்வி எழுப்புகின்றார்கள். இந்த மாநாடு திடீரென்று நடத்தப்படுகின்ற மாநாடு அல்ல. கடந்த மூன்று ஆண்டுகளில் நம்முடைய முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஏராளமான சாதனைகளை செய்து விட்டு தான் இந்த மாநாட்டை நடத்தி வருகிறது.
திமுக அரசை பொறுத்தவரை யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்காத அரசு, எல்லோருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கின்ற அரசு. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அறநிலையத்துறையின் பொற்காலம் என்றால் அது நமது திமுக ஆட்சி தான்.
திராவிட இயக்கத்தின் ஆக்கப் புள்ளியாக இருந்த நீதிக்கட்சியின் ஆட்சியின் போது தான் இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது என்று உதயநிதி கூறினார்.
2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை துறை மூலம் பல முயற்சிகளை செயல்படுத்தி வருகிறார்.
சுமார் 1,900-க்கும் மேற்பட்ட அதிகமான கோயில்களுக்கு குடமுழுக்கு செய்து வைத்தது,ரூ.5,600 கோடி மதிப்புள்ள 6,000 ஏக்கர் கோயில் நிலங்களை மீட்கப்பட்டது மற்றும் மாநிலத்தில் உள்ள கோயில்களில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்கு கோயில்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
“திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான். திராவிடம் யாரையும் ஒதுக்காது, எல்லோரையும் இணைக்கும் என்பதற்கு உதாரணத்தை
அனைத்து சாதியினரையும், மகளிரையும் அர்ச்சகர் ஆக்கியவர் முதல்வர்” என்றும் ஆன்மீகத்தை எல்லோருக்கும் உணர்த்துகின்ற வகையில் நடைபெறும்
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.