சென்னையில் ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்த எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கி.மீ. தொலைவுக்கு ஃபாா்முலா 4 காா் பந்தயம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விளக்குகள் பொருத்துவது, போட்டியைக் கண்டு ரசிக்கும் வகையில் 8,000 பேருக்கான இருக்கைகள் அமைப்பது, பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைப்பது என பந்தயத்துக்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
காா் பந்தயத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக செய்தி தொடா்பாளா் ஏ.என்.எஸ். பிரசாத் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தார். இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
இன்று, இவ்வழக்கை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்த மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இதனால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்த எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், எஃப்.ஐ.ஏ. சர்வதேச அமைப்பு சான்று இல்லாமல் ஃபார்முலா-4 கார் பந்தயத்தை நடத்தக் கூடாது எனவும், அவ்வாறு நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாம்.
ரயில் நிலையம், மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு எவ்வித இடையூரும் ஏற்படக்கூடாது என்றும், போக்குவரத்து சீராக இருக்க வேண்டும் என்று என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.