இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடல் வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

மழை, வெள்ளம், புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.
Mutharasan
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன்கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மழை, வெள்ளம், புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து, அனைத்துவகை நிவாரண நடவடிக்கையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

வட கிழக்கு பருவ மழை மற்றும் ஃபெஞ்சன் புயலின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று பாதிப்புகளை கண்டறிந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

மனித உயிர்கள் இழப்பு, விவசாயம், கால்நடைகள், மற்றும் குடியிருப்புகள் பாதிப்புகளை கணக்கில் கொண்டு நிவாரணங்களையும் முதல்வர் அறிவித்துள்ளார். நிவாரணத் தொகை ஓரளவிற்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும் கூட உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் என அறிவித்துள்ளதை மறுபரிசீலனை செய்து, ரூ.10 லட்சம் என அறிவிக்க கோருகிறோம்.

மேலும் விவசாயம் பாதிப்பிற்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரம் என்பதனை மறுபரிசீலனை செய்து ஏக்கர் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ. 25 ஆயிரம் வழங்கிட கேட்டுக் கொள்கிறோம்.

கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்கள் ஆண்டுதோறும் பருவமழை மற்றும் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்களின் குடிசைகளை இழந்து பரிதவிக்கும் அவலமான நிலைக்கு நிரந்தர தீர்வு காண, குடிசையில்லா நிலையை உருவாக்கி கான்கிரீட் வீடுகளை அரசு கட்டிக் கொடுக்கக் கூடிய முறையில் ஓர் விரிவடைந்த திட்டத்தை தயாரித்து செயல்படுத்திட வேண்டுகிறோம்.

மழை, வெள்ளம், புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து, அனைத்துவகை நிவாரண நடவடிக்கையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

பாதிப்பில் இருந்து முழுமையான மீட்புப் பணிகளை மேற்கொள்ள, தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிவாரண நிதியினை மத்திய அரசு கடந்த காலங்களைப் போன்று தமிழகத்தை புறக்கணிக்காமல், தமிழ்நாடு அரசு கோரியுள்ள முழுத்தொகையையும் தாமதமின்றி உடன் வழங்கிட வேண்டும் என முத்தரசன் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com