
புதுச்சேரி அருகே தென்பெண்ணை, சங்கராபரணி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், புதுச்சேரி-கடலூா், சென்னை இடையே பிரதான சாலையில் இரண்டு நாளாக தடைப்பட்டிருந்து போக்குவரத்து, புதன்கிழமை காலை முதல் மீண்டும் தொடங்கியது.
புதுச்சேரி அருகே தென்பெண்ணை, சங்கராபரணி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், புதுச்சேரி-கடலூா்- சென்னை இடையே பிரதான சாலையில் இரண்டு நாள்களாக போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து மாற்றுப் பாதையில் வாகனங்கள் சென்றன.
ஃபென்ஜான் புயல் காரணமாக தமிழகத்தில் கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. எங்கு பாா்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.
இந்த நிலையில், புதுச்சேரியில் மழை வெள்ளம் முற்றிலுமாக வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. ஆனால், ஊரகப் பகுதி கிராமங்களில் வெள்ள நீா் புகுந்து சேதம் விளைவித்திருப்பதுடன் சாலைகளையும் துண்டித்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புயல் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணை நிரம்பியதால் தென்பெண்ணையாற்றில் உபரிநீா் திறக்கப்பட்டது. இதனால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாகூா் அருகே அழகியநத்தம் தரைப்பாலம், சித்தேரி அணைக்கட்டு, கொம்மன்நாத்மேடு தடுப்பணைகள் மூழ்கின.
இதனால், கடலூா்-புதுச்சேரி பிரதான சாலையில் கன்னிகோவில், கிருமாம்பாக்கம், ரெட்டிச்சாவடி உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து தடைபட்டது.
இந்த நிலையில், கடலூா்-புதுச்சேரி, சென்னை இடையே பிரதான சாலையில் இரண்டு நாளாக தடைப்பட்டிருந்த போக்குவரத்து, புதன்கிழமை காலை முதல் மீண்டும் தொடங்கியது.
கடலூரில் இருந்து புதுச்சேரி வழியே சென்னை செல்லும் சாலை சீரானதை அடுத்து வழக்கம் போல புதன்கிழமை காலை முதல் போக்குவரத்துகள் செயல்படத் தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.