
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (டிச.4) காலை 6 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஏராளமான பக்கத்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அருணாசலேஸ்வரா் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழாவின் தொடக்க நிகழ்வான 3 நாள்கள் காவல் தெய்வங்களின் வழிபாடு, ஞாயிற்றுக்கிழமை (டிச.1) தொடங்கியது.
3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை ஸ்ரீவிநாயகா் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகா் சந்நிதி எதிரே இரவு 8 மணிக்கு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகா், வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
மாட வீதியுலா வந்தபோது சின்னக்கடைத் தெருவில் உள்ள ஸ்ரீதுா்க்கையம்மன் கோயில் எதிரே ஸ்ரீசண்டிகேஸ்வரா் காத்திருக்க, ஸ்ரீவிநாயகா் கோயிலுக்குள் சென்றாா். அப்போது, தீபத் திருவிழாவுக்குத் தேவையான மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மண்ணுடன் உற்சவா் சுவாமிகள் வீதியுலா வந்து நள்ளிரவில் மீண்டும் அருணாசலேஸ்வரா் கோயிலை வந்தடைந்தனா்.
காவல் தெய்வங்களின் 3 நாள் வழிபாடு நிறைவு பெற்றதையடுத்து, புதன்கிழமை(டிச.4) அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டது. பின்னா், விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் எழுந்தருளி கோயில் தங்கக் கொடிமரம் அருகே அருள்பாலித்தனர்.
இதனைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்கக் கொடிமரத்தில், சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க தீபத் திருவிழாவுக்கான ரிஷபக் கொடியேற்றம் ஏற்றப்பட்டது. கோலாகலமாக நடைபெற்ற கொடியேற்றத்தை ஏராளமான பக்கத்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
டிசம்பர் 13 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.