மாணவரை மிரட்டி அதிகப்பணம் பறித்த ஆட்டோ ஓட்டுநர்!
கோப்புப்படம்

மாணவரை மிரட்டி அதிகப்பணம் பறித்த ஆட்டோ ஓட்டுநர்!

பெங்களூரில் அதிகப் பணம் கேட்டு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மாணவரைத் தாக்க முற்பட்டுள்ளதைப் பற்றி..
Published on

கர்நாடகா: பெங்களூரில் செயலியில் காட்டியதை விட அதிகப்பணம் கேட்டு 20 வயது மாணவரை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மிரட்டி தாக்க முற்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் 20 வயது மாணவர் ஒருவர், பெல்லாந்தூர் பகுதியிலிருந்து மல்லசந்துராவிலுள்ள தனது விடுதிக்கு செல்வதற்காக செயலி மூலம் ஆட்டோ ஒன்று பதிவுச்செய்து பயணம் செய்துள்ளார்.

24 கி.மீ தூரப்பயணத்திற்கு அந்த செயலியில் 380 ரூபாய் கட்டணமாக காட்டிய நிலையில், பயணம் முடிந்தவுடன் அந்த ஆட்டோ ஓட்டுநர் ரூ. 500 கேட்டுள்ளார். அந்த மாணவர் அதனை மறுத்துவிட்டு செயலியில் காட்டிய பணத்தை மட்டும் செலுத்திவிட்டு சென்றுள்ளார்.

இதனால், கோபமடைந்த அந்த ஓட்டுநர், அந்த மாணவரின் விடுதிக்குள் புகுந்து தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகின்றது. பின்னர், தனது இரண்டு கூட்டாளிகளை அங்கு வரவழைத்து தாக்க முற்பட்டுள்ளதுடன் தகாத வார்த்தைகளினாலும் திட்டியுள்ளனர். அவரது அழைப்பின் பேரில் வந்த கூட்டாளிகள் இருவரும் போதையிலிருந்ததாகக் கூறப்படுகின்றது.

மேலும், அந்த மாணவரின் அலுவலகத்தின் அருகில் வந்து தாக்குவோம் எனக்கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால், வேறு வழியின்றி அந்த மாணவர் அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்துள்ளார்.

பின்னர், இந்தச் சம்பவம் குறித்த காட்சிப்பதிவுகளை அந்தச் செயலி நிறுவனம் மற்றும் நகரக் காவல்துறையை குறியிட்டு தனது எக்ஸ் சமூகத்தளத்தில் பகிர்ந்து வேதணை தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு பதிலளித்த அந்த செயலி நிறுவனம், அவருக்கு ஏற்பட்ட சம்பவம் தங்களுக்கு வருத்தமளிப்பதாகவும், அந்த மாணவரின் பாதுகாப்பே தங்களது முதல் குறிக்கோள் எனவும் இதுப்போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காது என உறுதியளிப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், அந்த பதிவின் கீழ் ஆட்டோ ஓட்டுநர்களினால் பயணிகள் தாக்கப்படுவது போன்ற நிகழ்வுகள் பெங்களூரில் அதிகரித்து வருவதாகக் கூறி இணையவாசிகள் அவர்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com