
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 வயது சிறுவன் எலி கடித்ததினால் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து பலியானான்.
ஜெய்பூரிலுள்ள அரசு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் கடந்த டிச.11 ஆம் தேதி 10 வயது சிறுவன் ஒருவன் அனுமதிக்கப்பட்டு புற்று நோயிற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளான் .
அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்கள் கழித்து சிறுவன் தொடர்ந்து அழுததினால் அவனது குடும்பத்தினர் அவனுக்கு போர்ர்த்தப்பட்டிருந்த போர்வையை விலக்கி பார்த்துள்ளனர். அப்பொழுது அவனது கால்பாதத்தில் எலி கடித்ததில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது.
பின்னர், மருத்துவப் பணியாளர்களிடம் கூறியதைத் தொடர்ந்து அவனது காயத்திற்கு முதலுதவி செய்யப்பட்டு மருத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நேற்று (டிச.13) அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுபற்றி மருத்துவமனை தரப்பில், சிறுவன் அதிக ஜுரம் மற்றும் நிமோனியா காய்ச்சலினால்தான் இறந்ததாகவும், எலி கடித்ததினால் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து அரசு சார்பில் குழு ஒன்று அமைத்து முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து அந்த புற்று நோய் சிகிச்சை மையத்தோடு இணைந்து செயல்படும் சவாய் மண் சிங் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் அம்மாநில மருத்துவக் கல்வி செயலாளர் அம்பிரிஷ் குமார் முழுமையான அறிக்கை ஒன்று சமர்பிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.