காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காய்ச்சல் பாதிப்புக்காக கடந்த நவம்பர் 11-ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நுரையீரல் சாா்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், திடீரென அவரின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், அதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சனிக்கிழமை காலை(டிச.14) தகவல்கள் வெளியான நிலையில், 10.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈவெரா காலமானதைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்று பேரவை உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.