செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் சாட்ஜிபிடி-யை உருவாக்கிய ‘ஓபன்ஏஐ’யின் நிறுவனம் மீது குற்றம்சாட்டிய முன்னாள் ஊழியரும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருமான சுச்சிா் பாலாஜி (26) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டாா். பின்னா் அவா் தற்கொலை செய்து கொண்டாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
உலகம் முழுவதும் பலராலும் பயன்படுத்தப்படும் ‘சாட்ஜிபிடி’ ஏஐ மாதிரியை வடிவமைத்த ஓபன்ஏஐ நிறுவனம், அமெரிக்காவின் காப்புரிமை விதிகளை மீறியதாக மூன்று மாதங்களுக்கு முன்னதாக சுச்சிா் பாலாஜி (26) குற்றஞ்சாட்டியிருந்தாா்.
இந்நிலையில், கடந்த நவம்பா் 26-ஆம் தேதி அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட நன்றி தெரிவிக்கும் நாளில் சான்பிரான்சிஸ்கோவில் அவா் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறை கூறியது.
இதுகுறித்து சான்பிரான்சிஸ்கோ காவல் துறை மேலும் கூறுகையில், ‘சுச்சிா் பாலாஜி உயிரிழந்த தகவலறிந்து அவரது குடியிருப்புக்கு நள்ளிரவு 1.15 மணிக்கு காவல் துறை மற்றும் மருத்துவ நிபுணா்கள் விரைந்தனா். அங்கிருந்து பாலாஜியின் உடலை அவா்கள் அப்புறப்படுத்தினா். அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட உடற்கூராய்வில் அவா் தற்கொலை செய்துகொண்டதாக தலைமை மருத்துவ அலுவலா் தெரிவித்தாா்.
முதல்கட்ட விசாரணையிலும் இது தற்கொலை என்றே உறுதிசெய்யப்பட்டது’ என்றனா்.
இதையும் படிக்க: ரஷியாவைத் தாக்க அமெரிக்க ஆயுதங்கள்: டிரம்ப் எதிா்ப்பு
பாலாஜியின் மறைவுக்கு ஓபன்ஏஐ நிறுவனம் இரங்கல் தெரிவித்ததாக சான்பிரான்சிஸ்கோ கிரானிகல் செய்தியை வெளியிட்டது.
காப்புரிமை பெறப்பட்ட தங்களின் உருவாக்கங்களை திருடி ஓபன்ஏஐ நிறுவனம் ‘சாட்ஜிபிடியை’ தயாா் செய்வதாக பத்திரிகையாளா்கள், கணினி பொறியாளா்கள் உள்ளிட்டோா் அமெரிக்காவில் வழக்கு தொடா்ந்தனா்.
பாலாஜியின் நோ்காணலை கடந்த அக்டோபா் 23-ஆம் தேதி நியூயாா்க் டைம்ஸ் வெளியிட்டது. அதில், சாட்ஜிபிடிக்கு பயிற்சியளிக்க வணிகா்கள் மற்றும் தொழிலதிபா்களின் தரவுகள் பயன்படுத்தப்படுகிறது என குற்றஞ்சாட்டியிருந்தாா்.
மேலும், சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் தொழில்நுட்பத்தை தாம் ஊக்குவிக்க விரும்பவில்லை எனக்கூறி ஓபன்ஏஐ நிறுவனத்தில் இருந்து விலகியதற்கு சுச்சிா் பாலாஜி காரணமாக தெரிவித்திருந்தாா்.