ஒரு ஸ்ரீவள்ளியின் மரணமும் குற்றவாளி புஷ்பாவும்!

புஷ்பா -2 படக் காட்சி நெரிசலில் இறந்த பெண்ணும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கைதும் குறித்து...
நடிகர் அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன்
Published on
Updated on
4 min read

ஒரு மாஸ் ஹீரோவுக்கான கதையில் வீர வசனங்கள், சண்டைக் காட்சிகள், உணர்ச்சிகளைத் தூண்டும் பாடல்கள் என இந்திய மார்க்கெட்டை சரியாகக் கணித்து எடுக்கப்பட்ட படமான புஷ்பா -2 இல் சில குறைகள் இருந்தாலும் பலருக்கும் படம் பொழுதுபோக்கு அம்சங்கொண்டதாக இருந்திருக்கிறது. இல்லையென்றால் சில நாள்களிலேயே ஆயிரம் கோடி சாத்தியமாயிருக்காது. ஆனால், புஷ்பா - 2 படத்தால் இரு வேதனையான விஷயங்கள் நடந்துள்ளன.

கதை நாயகன் புஷ்பா திருப்பதி காடுகளுக்குள் சென்று செம்மரங்களை வெட்டிக் குவித்து லாரியில் ஏற்றி மொத்த வனத்துறையையும் முட்டாளாக்கிக் கட்டைகளைக் காசாக மாற்றுகிறார். பல கோடிகளில் நடக்கும் இந்த வியாபாரத்தில் புஷ்பாவுக்கு பணம் கொட்டிக்கொண்டே இருக்கிறது. இந்தப் பணத்தை வைத்து நாயகன் என்னென்ன செய்யலாம்? ஆனால், புஷ்பா செய்வது ஒன்றே ஒன்றுதான். தன் மனைவி ஸ்ரீவள்ளி ஆசைப்பட்டால் அது எவ்வளவு விலையென்றாலும் சாதிக்க வேண்டும். அதற்காக, மொத்த காட்டையும் அழிக்கலாம்... யாரையும் கொல்லலாம்.

புஷ்பா - 2 கதை, திரைக்கதை, மேற்பார்வை என 20 பேராவது கதை உருவாக்கத்தில் இருந்திருக்கின்றனர். காட்டை வெட்டி அதில் காசும் சம்பாதிப்பவன் நாயகன் இல்லை குற்றவாளி என ஒருவராவது சொல்லாமலா இருந்திருப்பார்கள்? சொல்லியிருக்கலாம். ஆனால், இயக்குநருக்கோ தயாரிப்பாளருக்கோ தேவை பல கோடிகள். கமர்ஷியல் அடிதடி வெறியில் இந்தக் காட்டையும் பாதுக்காக்க வேண்டிய சந்தன, செம்மரங்களையெல்லாம் யார் கவனிக்கப் போகிறார்கள் என்கிற உளவியல் தெரியாதவர்களாக இவர்கள்?

2000 டன் செம்மரங்களை வெட்டி, வனத்துறைக்குத் தெரியாமல் வெளியே கொண்டு வந்து, ராமேஸ்வரம் வழியாகக் கடத்தி 4 ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கும் புஷ்பா அந்தப் பணத்தை வைத்து தன் மனைவிக்காக மாநிலத்தின் முதல்வரையே மாற்றிவிடுகிறார்! எப்படியிருக்கிறது? கேஜிஎஃப் திரைப்படத்திலாவது தன்னை நம்பியிருந்த மக்களுக்கு செல்வத்தையும் நகரத்தையும் கட்டமைத்துக் கொடுத்ததால் ராக்கி தப்பித்தார். ஆனால், புஷ்பாவில் அடிப்படை அறம்கூட பேசப்படவில்லை.

படம் முழுக்க செம்மரக் கட்டைகள், அதன் வர்த்தகம், காட்டைக் கூறுபோட்டு நூற்றுக்கணக்கான லாரிகளை வனத்திற்குள் விட்டு சேதமாக்குதல் என இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நுகர்வு நோக்கம் உச்சத்தில் இருந்தால் மட்டுமே இப்படியான கதையும் காட்சிகளும் சாத்தியமாயிருக்கும். இன்றும் தமிழகம், ஆந்திரப் பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக பலரும் இப்படி காடுகளுக்குள் செம்மரங்களை வெட்டக் கிளம்புகின்றனர். புஷ்பா இவர்களை ஊக்குவிக்குமா, இல்லை திருத்துமா? இப்படத்திற்காக இயக்குநர் சுகுமார் 5 ஆண்டுகளாக உழைத்திருக்கிறார் என்று வேறு பெருமையாகப் பேசுகிறார்கள்.

ஒரு இடத்தில்கூட காடுகளின் மகத்துவமோ அல்லது பாதுகாக்க வேண்டியவற்றைக் காசுக்காகத் தவறாக சித்திரிக்கிறோமே என்கிற சிந்தனைகூட இல்லை. விமர்சகர்களே பலர் இதைச் சுட்டிக்காட்டவில்லை. நம் கூட்டு ரசிக கமர்சியல் மயக்கத்தில் இந்தக் காட்டை அடியோடு மறந்தவிட்டாகிவிட்டது. கமர்ஷியல் படமென்றால் லாஜிக் பார்க்க வேண்டாம்தான். அதற்காக நியாயத்தையும் பார்க்கக் கூடாது என கடந்துசெல்ல முடியுமா?

இதை செரித்தாலும் சகிக்க முடியாத இன்னொரு கூத்தையும் அல்லு அர்ஜுன் நிகழ்த்தியிருக்கிறார். புஷ்பா - 2 வெளியாவதற்கு ஒருநாள் முன்பாக தெலங்கானா அரசு சிறப்புக் காட்சிகளை அனுமதித்தது. இதில், ஹைதராபாத்தில் இரவுக்காட்சியைக் குடும்பத்துடன் பார்க்க வந்த ரேவதி என்கிற பெண்மணி அல்லு அர்ஜுனின் திடீர் வருகையால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அநியாயமாக உயிரிழந்தார். அவரது 9 வயது மகனும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குத் தூக்கிச்செல்லப்பட்டு இன்னமும் சிகிச்சையில் இருக்கிறார். இந்த கலவரங்கள் புஷ்பா - 2 படத்தை பாதிக்கவில்லை. சொல்லப்போனால், பெரிய மார்க்கெட் உத்தியாக இந்நிகழ்வையே மொத்த படக்குழுவும் மாற்றிக்கொண்டனர்.

இறந்தவர் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு தருவதாகக் கூறி அல்லு அர்ஜுன் வெளியிட்ட விடியோவில் புஷ்பாவுக்கான புரமோஷன் டி - ஷர்ட்டை அணிந்திருக்கிறார். குறைந்தபட்சம் அடிப்படை நாகரிகம் பற்றிக்கூட ஒருவரும் கவலைப்படவில்லை. கைது செய்யும்போது அல்லு அர்ஜுன் ‘பூ அல்ல நெருப்பு’ என ஹிந்தியில் எழுதப்பட்ட டி ஷர்ட்டை அணிந்துகொண்டே கைதாகிறார். எவ்வளவு பெரிய மாண்பான மனிதர் பாருங்கள். பாவம், இன்னும் வசூல் தேவைப்படுகிறது. இந்த விஷயத்தில் தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி எடுத்த நடவடிக்கை சரியானது என்றே கருதப்படுகிறது. ஆனால், அதையும் அரசியலாக்கி அல்லு அர்ஜுனுக்கு புனிதர் பட்டம் கொடுக்கின்றனர் என்றே பெரும்பாலானோர் நினைக்கின்றனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி பலியான பெண்ணுக்கும் அல்லு அர்ஜுனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வைத்துக்கொண்டாலும் தன் பிரபலத்தால் கூடிய கூட்டத்தில் அப்பாவியாக ஒரு பெண், அதுவும் தன்னுடைய படத்தைப் பார்க்க வந்த ரசிகை, இறந்துவிட்டாரே என்கிற குற்ற உணர்வுகூட அல்லு அர்ஜுனிடம் இருக்கவில்லை. ஜாமீன் கிடைத்து வீட்டிற்கு வந்ததும் எவ்வளவு நெருங்கியவர்களானாலும் குற்றச்சாட்டை மனதில்கொண்டாவது சந்திப்புகளைத் தவிர்த்திருக்க வேண்டாமா?

ஆயிரம் கோடியும் சில அரசியல் ஆசைகளும் என்பதுபோல் ஏதோ பெரிய தியாகத்தை செய்து தன் வீட்டிற்கு வெளியே கம்பீரமாக அல்லு அர்ஜுன் அமர்ந்திருக்க தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் நேரில் சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவிக்கின்றனர். முகத்தில் புன்சிரிப்போடு அல்லு அர்ஜுன் அணைத்துக்கொண்டு இந்த மாநிலமே நம் கையில்தான் என பெருமைப்படுகிறார். இந்தக் காட்சிகளின்வழி, நாளையே நேரடியாக ஒரு குற்றத்தை இவர்கள் செய்தால் நம் சட்டங்கள் கடுமையாக பாய்ந்துவிடுமோ என்கிற பயத்தையெல்லாம் போக்கியிருக்கிறார்கள்.

தோரணையாகத் தன் வீட்டின் முகப்பில் சோபாவில் அல்லு அர்ஜுன் தன் தந்தை அல்லு அரவிந்துடன் அமர்ந்திருக்க விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்பட மொத்த டோலிவுட்டும் அவர் வீட்டுக்குப் படையெடுத்து நாங்கள் சாதாரணமானர்கள் இல்லை என உலகிற்கு அறிவிக்கின்றனர். இவையெல்லாம் போதாது என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தன் பங்கிற்கு அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு கொடுக்கிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை இரயில் விபத்துகள்? எவ்வளவு உயிர்கள்? அப்போது இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதற்காகப் பொறுப்பேற்றுக் கொண்டாரா? விபத்து நடந்தது குறித்து ஆய்வு செய்கிறோம்; தொழில்நுட்ப கோளாறு; ஊழியர்களின் கவனக்குறைவு என என்னவெல்லாம் காரணங்களை அடுக்க முடியுமோ அங்கெல்லாம் பலிகளுக்கான பழிகள் இருந்தன. அல்லு அர்ஜுனால் ஒரு உயிர்போனது குறித்து எந்த அதிர்ச்சியும் இல்லாமல் இந்த கைது நடவடிக்கை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் விளம்பரம் என வந்தே பாரத் வேகத்தில் கருத்துகளைத் தெரிவிக்கிறார்.

அஸ்வினி வைஷ்ணவ் மட்டுமல்ல இந்தியளவில் முக்கிய பொறுப்புகளிலுள்ள ஆளும் பாஜக அரசின் அதிகாரங்கள் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக இருக்கின்றன. நாளை ஒரு சாமானியரும் இந்த ஆயிரம் கோடி வசூல் ராஜாவும் ஒரே வழக்கில் சந்தித்துக்கொண்டால் நீதியின், அதிகாரத்தின் கை யாரை அணைக்கும் என்பதில் சந்தேகங்கள் வேண்டாம்போல. அல்லு அர்ஜுன் மீதான புகாரை உயிரிழந்தவரின் கணவர் வாபஸ் வாங்கிவிட்டார்.

ஒன்றுமறியா ஒரு பெண்ணின் மரணத்தைக் காட்டுத்தீயாக மாற்றி மொத்த புஷ்பா குழுவும் அதில் சுகமாக காய்ந்து கொண்டிருக்கிறார்கள். தியாகம் செய்து சிறைக்குச் சென்ற நாயகனைக் காலையிலிருந்து இரவு வரை பிரபலங்கள் சந்தித்துக்கொண்டே இருக்கின்றனர். அதை 100க்கும் மேற்பட்ட கேமராக்களுடன் ஊடகங்கள் மறக்காமல் காட்சிப்படுத்துகின்றன. தம்முடைய அதீத ஆர்வத்தால் ஒரு உயிர்போனதே என்கிற எந்த வருத்தமும் இல்லாமல் வந்துபோன நட்சத்திரங்களுக்கு தேநீர் கொடுத்து சிரித்து அரட்டை அடிக்கிற அல்லு அர்ஜுனின் முகத்தைப் போல அச்சம் தரக் கூடிய வில்லனை இந்திய சினிமா தவற விடக்கூடாது. 12 மணிநேர காவலிலிருந்து வீடு திரும்பும் அல்லு அர்ஜுனை அவரது மனைவி கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.

அல்லு அர்ஜுன் தன் மனைவியுடன்...
அல்லு அர்ஜுன் தன் மனைவியுடன்...

அதை அவரது ஆதரவாளர்கள் விடிய விடிய கொண்டாடுகிறார்கள். சமந்தா உள்பட பல நடிகைகள் நெகிழ்ச்சியான தருணம் என சிலாகித்து விடியோவைப் பகிர்கின்றனர். ஆனால், மறுபுறம் மனைவியை இழந்து மகனைத் தீவிர சிகிச்சைக்கு ஒப்புக்கொடுத்த மனிதரைப் பற்றி (கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்த கணவருக்காகத் தன்னுடைய கல்லீரலின் பகுதியைக் கொடையாக வழங்கியவர் இறந்த பெண்மணி, பிணவறைக்கு வெளியே இதைச் சொல்லி கணவர் அழுத கதறல் இவர்களில் யாருக்காவது கேட்டிருக்குமா?) இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. நட்சத்திரங்களை விடுங்கள், சாமானிய ரசிகர்களுக்குக்கூட அந்த வேதனை இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு படத்தையும் அதன் நாயகனை எவ்வளவு தூரம் கொண்டாட வேண்டும் என்கிற பக்குவம் நமக்கில்லை. 1500 கோடி வசூலித்த அல்லு அர்ஜுனுக்கு அவரது மனைவி ஸ்ரீவள்ளி எனும்போது ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துத் தன் குடும்பத்தின் ஆசையை நிறைவேற்றியவரின் மனைவியும் ஒரு ஸ்ரீவள்ளிதான் என உணர்வார்களா? யானை செல்லும் பாதையில் எறும்புகள் நசுங்கினால் இங்கு எறும்புகளே கவலைப்படுவதில்லை என்கிறபோது யானையை ஓரமாகச் செல்லச் சொல்வதில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com