
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹாசிம்புராவில் 1987 ஆம் ஆண்டு 38 இஸ்லாமியர்களை படுகொலைச் செய்த குற்றவாளிகளில் மேலும் 2 பேருக்கு உச்சநீதிமன்றம் இன்று (டிச.20) ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த 1987ஆம் ஆண்டு மே 22 அன்று மீரட் கலவரத்தின் போது உத்தரப் பிரதேச மாநில ஆயுதப் படைப் போலீஸாரால் ஹாசிம்புராவில் சுமார் 50 இஸ்லாமிய ஆண்கள் சுற்றி வளைக்கப்பட்டு ஊருக்கு வெளியே கொண்டுச் செல்லப்பட்டு சுடப்பட்டனர். அதில் 38 பேர் பலியானார்கள்.
பின்னர் கொல்லப்பட்டவர்களின் உடல்களை போலீஸார் கால்வாயில் வீசி எறிந்தனர். இந்தச் சம்பவத்தில் வெறும் 5 பேர் மட்டுமே உயிர்பிழைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த படுகொலையில் ஈடுப்பட்ட உத்தரப் பிரதேச காவல்துறையின் 41ஆவது படையின் சீ பிரிவுவைச் சேர்ந்த 19 போலீஸாரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணை காலத்திலேயே குற்றம்சாட்டப்பட்டவர்களில் 3 பேர் மரணமடைய, 16 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர், கடந்த 2015 ஆம் ஆண்டு போதுமான சாட்சிகள் இல்லை எனக் கூறி விசாரணை நீதிமன்றம் 16 பேரையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தது.
இதையும் படிக்க: தில்லி பாஜக அலுவலகம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் பீதி
ஆனால், 2018 ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்றம் அந்த தீர்ப்பை ரத்து செய்து கொலை, ஆள் கடத்தல், குற்றச் செயலுக்கு சதித்திட்டம் தீட்டுதல் மற்றும் சாட்சிகளைக் கலைத்தல் ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்நிலையில் கடந்த டிச.6 அன்று 8 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து குற்றவாளிகளான புத்தி சிங் மற்றும் பசந்த் பல்லாப் ஆகிய இருவரும் தாங்கள் ஏற்கனவே 6 வருடங்கள் சிறையில் கழித்துள்ளதாகக் கூறி ஜாமீன் கேட்டு முறையீடு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகளான அபய் எஸ் ஒகா மற்றும் அக்ஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று (டிச.20) இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஆனால், உத்தரப் பிரதேச குற்றவியல் காவல் துறையின் அறிக்கையில் இந்தப் படுகொலையில் 66 போலீஸார் ஈடுப்பட்டதாகக் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.